அமைச்சர் மெய்யநாதன்
அமைச்சர் மெய்யநாதன் 
அரசியல்

ஓடும் ரயிலில் அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீர் நெஞ்சுவலி: மேல்சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்லப்படுகிறார்

காமதேனு

தமிழக இளைஞர் நலன், சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதனுக்கு ஏற்பட்ட திடீர்  நெஞ்சுவலி காரணமாக  கடலூர் மாவட்டம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக இளைஞர் நலன், சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு  நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு விட்டு நேற்று இரவு ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னைக்கு சென்று கொண்டிருந்தார்.

ரயில் மயிலாடுதுறையைத் தாண்டிய போது அமைச்சருக்கு திடீரென நெஞ்சுவலியும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. அதனையடுத்து உடனடியாக சிதம்பரம் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆய்வாளர் அருண்குமார் தலைமையிலான ரயில்வே போலீஸார் அமைச்சரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வாகனத்துடன் தயாராக காத்திருந்தனர்.

ரயில் நிலையத்திற்கு ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றதும், அமைச்சர் மெய்யநாதன் அதிலிருந்து இறக்கப்பட்டு உடனடியாக அண்ணாமலை நகரில் இருக்கும் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதனையடுத்து  சிறப்பு மருத்துவர்கள் அவருக்கு உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.  தற்போது அவரது உடல்நிலை நலமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அமைச்சரை காண யாருக்கும் தற்போது வரை அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக அமைச்சரைக் கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளதால், புதுக்கோட்டையில் உள்ள அமைச்சரின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் இதேபோல இளைய அமைச்சரான பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்  மகேஷ் பொய்யாமொழிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது வீடு திரும்பியுள்ள நிலையில்,  மற்றொரு இளம்  அமைச்சரான மெய்யநாதனுக்கு உடல் நலக்குறை ஏற்பட்டிருப்பது திமுகவினர் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT