அரசியல்

மனு கொடுக்க வந்த பொதுமக்கள்...அடிக்கப் போன அமைச்சர்: ஆட்சியர் முன் நடந்த களேபரம்!

காமதேனு

கோரிக்கை மனு அளிக்க வந்தவரை அமைச்சர் ஒருமையில் பேசி அடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது பாப்பாங்குழி ஊராட்சி. இப்பகுதியில் உள்ள வடந்தாங்கல் ஏரியைப் புனரமைப்பதற்காக 8 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய்நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தப் பணிக்கு அடிக்கல் நாட்டுவதற்காக நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வந்திருந்தார். மேலும் இந்த நிகழ்ச்சிக்குச் சிறப்பு அழைப்பாளராகச் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் கலந்து கொண்டார்.

மாவட்ட ஆட்சியரும், அமைச்சரும் வருவதைக் கேள்விப்பட்ட ராமானுஜபுரம் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குளத்தினைச் சீரமைப்பதற்காக அமைச்சரைச் சந்திக்க வந்தனர்.

அப்போது, ‘பொதுப்பணித்துறை சார்பாக விடப்படும் ஏலம் வேண்டாம். கிராம மக்கள் சார்பாக விடப்படும் ஏலத்தைச் செயல்படுத்த வேண்டும்’ என அமைச்சரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது கிராம மக்கள் கொடுத்த மனு தொடர்பாக அவர்களிடம் பேசினார். அப்போது மனு கொடுத்தவர்களில் ஒருவர் குறுக்கே பேசும் போது, திடீரென ஆத்திரமடைந்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஒருமையில் பேசி அவரை கையை நீட்டி அடிக்கப் போனார். இதனால் மனு கொடுக்க வந்தவர்கள் மிரண்டு போனார்கள். புகார் கொடுக்க வந்தவர்களிடம் அமைச்சர் நடந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT