அரசியல்

கேரளத்துக்கு கடத்த முயன்ற கனிமவளம்: சிக்கிய லாரி டிரைவர்கள்: திமுக எம்பி மகனை தேடும் போலீஸ்

காமதேனு

நெல்லை மாவட்டத்தில் கனிம வளக்கடத்தலில் ஈடுபட்ட இரு டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த கடத்தல் வாகன உரிமையாளரான திமுக எம்.பியின் மகன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லையில் இருந்து கேரளத்திற்கு கட்டுப்பாடு இல்லாத அளவுக்கு மணல், கனிமவளங்கள் கடத்தப்படுவதால் போலீஸார் அவ்வப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நெல்லை மாவட்டம், பழவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விஸ்வநாதபுரம் விலக்கில் பழவூர் சார் ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான போலீஸார் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது முறையான அனுமதியின்றி இரு லாரிகளில் கிராவல் மண் கேரளத்திற்கு கொண்டு செல்வது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து லாரி ஓட்டுநர்களான அம்பாசமுத்திரம் புலவன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ரமேஷ்(28), சங்கரன்கோவில் அருகில் உள்ள சிதம்பராபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயபாலன் (42) ஆகியோரைக் கைது செய்தனர்.

பழவூர் போலீஸார் இவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த லாரிகள் நெல்லை திமுக எம்.பி ஞானதிரவியத்தின் மகன் தினகரனுக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து எம்.பியின் மகன் தினகரன் மீதும் வழக்குப்பதிவு செய்திருக்கும் போலீஸார், தினகரனைத் தேடிவருகின்றனர்.

SCROLL FOR NEXT