விஜயராமன்
விஜயராமன் 
அரசியல்

முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பதிவு: சிக்கிய ஸ்டூடியோ உரிமையாளர்

காமதேனு

தமிழக அரசையும், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அமைச்சர்களையும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவிட்டு வந்தவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாயூரநாதர் வீதியில் வசித்து வருபவர் விஜயராமன்(57). இவர் மயிலாடுதுறை ஆனதாண்டவபுரம் பகுதியில் ஸ்டூடியோ ஒன்றை நடத்திவந்தார். சில வருடங்களுக்கு முன் ஸ்டூடியோவை மூடிவிட்டு வெளியூர் சென்று வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் ஊர் திரும்பியுள்ளார்.

இந்நிலையில் இவர் அண்மைக்காலமாக தனது ட்விட்டர் பக்கத்தில் திமுகவையும், தமிழக அரசு, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பற்றியும் மிகவும் தரக்குறைவாக விமர்சித்து தொடர்ந்து பதிவிட்டுள்ளார். இது திமுகவினர் மத்தியில் மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது.

இதனால் திமுகவைச் சேர்ந்த முன்னாள் நகரமன்ற உறுப்பினர் கூரைநாடு மாசிலாமணி, மயிலாடுதுறை காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். தங்கள் கட்சியையும், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டவர்களையும் தொடர்ந்து அவதூறு செய்து வரும் விஜயராமனை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்திருந்தார். அவரின் புகாரை பதிவுசெய்த மயிலாடுதுறை போலீஸார், ஆபாசமாக பதிவிடுதல், சட்டம், ஒழுங்கை சீர்குலைப்பது, கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிந்து, நேற்று மாலை விஜயராமனை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி அவரை சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT