மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி 
அரசியல்

‘ஆவணங்களில் கையெழுத்திடும் போது எச்சரிக்கையாக இருங்கள்’ - அமைச்சர்களுக்கு முதல்வர் அலர்ட் உத்தரவு!

காமதேனு

அதிகாரப்பூர்வ ஆவணங்களில் கையெழுத்திடும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அமைச்சர்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அனுப்ரதா மோண்டல் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சரிவை சந்தித்துள்ள அரசின் இமேஜை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சியாக மம்தா பானர்ஜி புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

சமீபத்தில் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்ட பின்னர் நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, ”அமைச்சர்கள் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சமயங்களில் மட்டும் சைரன் வைத்த பைலட் கார்களை பயன்படுத்த வேண்டும். மாநிலத்தில் வேறு எங்கும் செல்ல பைலட் கார்களைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். முக்கியமாக எந்தவொரு ஆவணத்திலும் கையெழுத்திடும் முன் அவற்றை அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் முழுமையாகப் படிக்க வேண்டும்” என அறிவுறுத்தினார்

மேலும் இந்தக் கூட்டத்தில், மாநில வனத்துறை அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக்கிற்கு எதிராக பல புகார்கள் வருவதாகவும், அவர் தனது நற்பெயரை பாதுகாக்க வேண்டும் எனவும் மம்தா சுட்டிக்காட்டினார்.

தொழில்துறை இலாகாவை கவனித்த பார்த்தா சாட்டர்ஜி, ஆசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பான வழக்கில் கடந்த மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது அமைச்சர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். மேலும் கட்சியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

SCROLL FOR NEXT