அரசியல்

ஆவின் குறித்து அவதூறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை: அமைச்சர் நாசர் எச்சரிக்கை

காமதேனு

ஆதாரம் இல்லாமல் ஆவின் நிறுவனப் பொருட்கள் மீது தவறான தகவல்களைப் பரப்பினால் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

ஆவின் பாலில் அதிக தண்ணீர் கலப்படம், எடை குறைவு போன்ற குற்றச்சாட்டுகள் சமீபத்தில் எழுந்தன. அதுபோல் பால்பாக்கெட்டில் ஈ இறந்து கிடந்ததும், ஆவின் குலாப் ஜாமூனில் பூஞ்சைகள் இருப்பதாகச் செய்திகள் வெளியானதும் சர்ச்சையை ஏற்படுத்தின. இது குறித்து ஆவின் நிறுவனத்தால் அடிக்கடி விளக்கம் அளிக்கப்பட்டு வந்தது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் பொருட்களை அதிக அளவு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் நிறுவன ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸை அமைச்சர் நாசர் இன்று வழங்கினார்.

அப்போது அவர் கூறுகையில், “தீபாவளிக்கு இனிப்பு விற்பனை இரண்டு மடங்கு உயர்ந்து 110 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. நன்கு பரிசோதனை செய்த பிறகே ஆவின் இனிப்பு வகைகள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. இதனால் ஆவின் நிறுவனத்திற்குப் போட்டி அதிகமாகியுள்ளது. ஆவின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் சில அரசியல் கட்சிகளும், சில தனியார் நிறுவனங்களும் பல்லி, பூச்சி, கிருமிகள் போன்றவை உள்ளதாக உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். அவ்வாறு அவதூறு பரப்புபவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க ஆலோசனை செய்து வருகிறோம் ” என்றார்.

SCROLL FOR NEXT