கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோக்
கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோக்  காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் நாங்கள்தான் ஆட்சி அமைப்போம்: கர்நாடக பாஜக அமைச்சர் அதிரடி
அரசியல்

காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் நாங்கள்தான் ஆட்சியமைப்போம்: கர்நாடக பாஜக அமைச்சர் அதிரடி!

காமதேனு

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்காவிட்டாலும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஒரு செய்தி தொலைக்காட்சிக்கு கர்நாடக அமைச்சர் அசோக் அளித்த பேட்டியில், "அரசாங்கம் அமைப்பதே எங்களின் நோக்கம்... எப்படி, என்ன செய்வோம் என்று கேட்காதீர்கள். நிச்சயம் வெற்றி பெற்று பெரும்பான்மை பெறுவோம். ஆனால் அது தொங்கு சட்டசபையாக இருந்தாலும் நாங்கள் ஆட்சி அமைப்போம். காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் அவர்களுக்கு பெரும்பான்மை கிடைக்காது. எனவே மீதமுள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு மத்திய அரசின் உதவி தேவைப்படும். பாஜகவால் மட்டுமே நிலையான ஆட்சியை வழங்க முடியும் என்பது அனைத்து எம்எல்ஏக்களுக்கும் தெரியும். ஏனென்றால், நீங்கள் பார்த்தது போல், காங்கிரஸ் -ஜேடிஎஸ் அரசாங்கம் 2018 ல் அமைக்கப்பட்டு ஒரு வருடத்தில் கவிழ்ந்தது.

எல்லோரும் நினைப்பது என்னவென்றால், நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதில் சந்தேகமில்லை. அதேபோல, கர்நாடகாவில் நிலையான ஆட்சியை பாஜகவால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்துப் பிரதிநிதிகளும் கருதுகின்றனர். இது எங்களுக்கு ப்ளஸ் பாயிண்ட்டாக இருக்கும்”என்று கூறினார். அதே நேரத்தில் கர்நாடக பாஜக செய்தித் தொடர்பாளர் எம்ஜி மகேஷ் கூறுகையில், பாஜக போதுமான இடங்களை கைப்பற்றும் என்பதால் தொங்கு சட்டசபை என்ற சூழல் வராது என்று கூறினார்.

224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டமன்றத் தேர்தல் காங்கிரஸுக்கு வெற்றி அல்லது அறுதிப் பெரும்பான்மையை அளிக்கும் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT