அரசியல்

பயங்கரவாதிகளின் புகலிடமா குமரி?- எச்சரிக்கும் பாஜக

என்.சுவாமிநாதன்

குமரிமாவட்டம், பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறிவருவதாக பாஜக மாவட்டம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளது. இந்துக்கள் மீது தொடர் தாக்குதல் நடப்பதாகவும், தமிழக அரசும், காவல் துறையும் அதை வேடிக்கைப் பார்ப்பதாகவும் போஸ்டரில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

அப்படி என்னதான் நடந்தது என பாஜகவின் குமரி மாவட்டத் தலைவர் தர்மராஜிடம் பேசினோம். “கடந்த 21-ம் தேதி காலையில் பனக்காளுமுக்கு பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் நாகர்கோவில் நோக்கி டூவீலரில் சென்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் அவரைப் பின்தொடர்ந்து வந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள் அவரை வழிமறித்து மிகக்கொடூரமாகத் தாக்கினர். இத்தனைக்கும் ராதாகிருஷ்ணனின் பைக்கில் அவரது மனைவியும் இருந்தார். அதைகூட அந்த கும்பல் பொருட்படுத்தவில்லை. தாக்குதலுக்கு உள்ளான ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

குமரி மாவட்டத்தில் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல ஊர்களில் பாதுகாப்பாக இருந்துகொண்டு, இப்படிப்பட்ட பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். குமரியில் பல இந்து சமுதாய மக்கள் இப்படி தொடர் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்து சமுதாயம் மட்டுமல்ல, வில்சன் என்று சொல்லக்கூடிய காவல்துறை அதிகாரி, களியக்காவிளை சுங்கச்சாவடியில் வைத்து பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டதையும் இங்கே நினைவுகூர்கிறோம். அந்தவகையில் இந்து மதத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் இப்போது தாக்கப்பட்டிருக்கிறார். இந்த பயங்கரவாதிக்கு அடைக்கலம் கொடுத்திருப்பது யார் என அரசு விசாரிக்க வேண்டும். தேசிய புலனாய்வு முகமை இதை விசாரிக்க வேண்டும். இதை வலியுறுத்தி வரும் 24-ம் தேதி திங்கள் நகரில் பிரம்மாண்டமான போராட்டத்தை பாஜக முன்னெடுக்கிறது” என்றார்.

பயங்கரவாதிகளின் புகலிடமாக குமரி மாவட்டம் மாறுவதாக பாஜக ஒட்டியிருக்கும் போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

SCROLL FOR NEXT