இன்பதுரை
இன்பதுரை விஸ்வரூபம் விவகாரத்தில் ஜெயலலிதாவுக்கு கமல் சொன்ன நன்றி: மீண்டும் வீடியோ வெளியிட்ட இன்பதுரை
அரசியல்

விஸ்வரூபம் விவகாரத்தில் ஜெயலலிதாவுக்கு கமல் சொன்ன நன்றி: மீண்டும் வீடியோ வெளியிட்ட இன்பதுரை

காமதேனு

`விஸ்வரூபம்' விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கமல்ஹாசன் நன்றி சொல்லும் வீடியோ ஒன்றை அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை வெளியிட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.இளங்கோவனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கடந்த 19-ம் தேதி பிரச்சாரம் செய்தார். அப்போது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை குறித்து விமர்சனம் செய்தார். "விஸ்வரூபம் படம் விவகாரத்தில் என்னை தடுமாற வைத்து சிரித்தார் ஒரு அம்மையார்" என்று கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்திருந்தார் அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை.

இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா `விஸ்வரூபம்' படம் குறித்து பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், "இஸ்லாமியர்களை இழிவுபடுத்தியதால்தான் விஸ்வரூபம் படத்தை அம்மா அரசு தடைசெய்தது. தன்னை தடுமாறவைத்தவர் அம்மா. தேற்றியவர் கருணாநிதி என திமுகவின் ஊதுகுழலான கமல்ஹாசன் பேசியுள்ளார். ஆக முஸ்லிம்களின் உணர்வை மதித்தவர் அம்மா. ரகசியமாக மிதித்தது திமுக என்ற உண்மையை உரைத்த குழல்ஹாசனுக்கு நன்றி" என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், `விஸ்வரூபம் திரைப்பட விவகாரம்' என்று தலைப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அன்றைய முதல்வர் அம்மா அவர்களுக்கு திரு.கமலஹாசன் உணர்ச்சிமயமாக நன்றி தெரிவிக்கும் வீடியோ! வாக்குமூலம் எனவும் பொருள் கொள்ளலாம்!" என்று கூறியிருக்கிறார்.

SCROLL FOR NEXT