செய்தியாளர்கள் சந்திப்பில் கே. பாலகிருஷ்ணன்
செய்தியாளர்கள் சந்திப்பில் கே. பாலகிருஷ்ணன் 
அரசியல்

நாடாளுமன்றத்தை நாடக மன்றமாக்கிய பாஜக: குற்றம் சாட்டுகிறார் கே.பாலகிருஷ்ணன்

காமதேனு

நாடாளுமன்றக் கூட்டத்தைக்கூட நாடகமன்ற கூட்டமாக பாஜக நடத்திக் கொண்டிருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மத்திய அரசை எந்த விதத்திலும் விமர்சனம் செய்யக்கூடாது என்ற விதத்தில் பாஜகவினர் நடந்து கொள்கின்றனர். நாடாளுமன்ற கூட்டத்தைக் கூட நாடகமன்ற கூட்டமாக நடத்துகின்றனர். நாடாளுமன்றத்தில் வெளியில் போராடினாலும் நடவடிக்கை என்று கூறுகின்றனர். அந்த வகையில் 17 எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

நாடாளுமன்ற ஜனநாயகத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையாக பாஜக செயல்படுகிறது. ஏற்கனவே பாஜக எதிர்க்கட்சியாக இருக்கும்போது மாதக்கணக்கில் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் போராட்டம் நடத்தியது.
சர்வாதிகாரத்தை நோக்கி இந்த அரசு சென்று கொண்டிருக்கிறது. எனவே, ஜனநாயக எண்ணம் கொண்டுள்ள எல்லோரும் கிளர்ந்து எழவேண்டிய நேரம் வந்துவிட்டது.

கள்ளக்குறிச்சியில் மாணவி இறந்தது தொடர்பாக உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். மாணவியின் சாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இதில் தேவை இல்லாமல் சாதிப் பிரச்சினையை இழுக்க வேண்டிய அவசியம் இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் யார் என்று தான் பார்க்க வேண்டுமே தவிர, என்ன சாதி என்று பார்க்கத் தேவையில்லை. சாதியைப் பார்ப்பதினால் இந்த பிரச்சினையில் மேலும் மேலும் சிக்கல்தான் உருவாகும். அது தீர்வு காண உதவாது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர சந்தேகத்தின் மீது போவோர் வருவோரை எல்லாம் கைது செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழ்நாட்டில் குருவை சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கு பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் 31-ம் தேதியோடு முடிகிறது. ஆனால், இதுவரையில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்வதற்கான நிறுவனங்கள் எது என்பது கூடத் தெரியாது.
இரண்டு நாளில் தமிழகத்தில் பயிர் காப்பீடு செய்வது என்பது சாத்தியமில்லை. எனவே, தமிழக முதலமைச்சர் மத்திய அரசோடு பேசி பயிர் காப்பீடு செய்வதற்கான காலத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிக்க வேண்டும். உடனடியாக பயிர் காப்பீடு செய்வதற்கான நிறுவனங்களைத் தேர்வு செய்து அறிவிக்கவேண்டும்" என்றார்.

SCROLL FOR NEXT