அரசியல்

குதிரை பேர அச்சம்: சத்தீஸ்கர் மாநிலத்திற்கு புறப்பட்டனர் ஜார்க்கண்ட் எம்எல்ஏக்கள்!

காமதேனு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் இன்று விமானம் மூலமாக சத்தீஸ்கர் மாநிலத்துக்கு புறப்பட்டு சென்றனர். இதற்காக 72 இருக்கைகள் கொண்ட இண்டிகோ சார்ட்டர் விமானம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் இல்லத்தில் நடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, அவர்கள் காங்கிரஸ் ஆளும் அண்டை மாநிலமான சத்தீஸ்கரில் உள்ள ராய்ப்பூருக்கு புறப்பட்டு சென்றனர்.

ஹேமந்த் சோரன் உள்ளிட்ட ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் இரண்டு பேருந்துகள் மூலம் முதல்வர் இல்லத்தில் இருந்து ராஞ்சி விமான நிலையத்திற்கு புறப்பட்டனர். அவர்கள் ராய்ப்பூரில் உள்ள மேஃபேர் ரிசார்ட்டில் தங்குவார்கள் என்றும், அங்கு போலீசார் குவிக்கப்படுவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொது விருந்தினர்கள் இந்த ரிசார்ட்டுக்குள் நுழைவதற்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

அதேபோல ராய்பூர் விமான நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தில் தரையிறங்கியதும் எம்.எல்.ஏ.க்கள் பேருந்து மூலமாக ஒரு சிறப்பு வழித்தடத்தில் ரிசார்ட்டை அடைவார்கள்.

முன்னதாக இன்று காலையில் ஹேமந்த் சோரனின் இல்லத்தில் யுபிஏ எம்எல்ஏக்கள் ஒன்று கூடி, மாநிலத்தின் அரசியல் சூழ்நிலை குறித்து விவாதித்தனர். ஆனால் ஹேமந்த் சோரனின் தகுதி நீக்கம் பற்றிய தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு குறித்து ஜார்க்கண்ட் ஆளுநர் அலுவலகம் மௌனம் காத்துள்ளது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் ஹேமந்த் சோரனை சட்டமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி பாஜக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தது. இதன் மீது தேர்தல் ஆணையம் தனது முடிவை ஆகஸ்ட் 25 அன்று மாநில ஆளுநர் ரமேஷ் பைஸிடம் தெரிவித்தது. எனினும் இந்த முடிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்த சூழலில் ஜேஎம்எம், காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கட்சிகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், தகுதி நீக்க அறிவிப்பதை "வேண்டுமென்றே தாமதப்படுத்துவதன் மூலம்" ஆளுநர் அரசியல் குதிரை பேரத்தை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், எந்தச் சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே மகாராஷ்டிராவைப் போல அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சியில் இருந்து காப்பதற்கான நடவடிக்கைகளை ஹேமந்த் சோரன் எடுத்து வருகிறார்.

SCROLL FOR NEXT