அரசியல்

மணிப்பூரில் அசத்திய ஐக்கிய ஜனதா தளம்!

காமதேனு

மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் பாஜக தனித்து நின்றே 32 தொகுதிகளில் வென்றுவிட்டது. ஆட்சியமைக்க 31 இடங்கள் தேவை எனும் நிலையில், பாஜக ஆட்சியமைப்பதில் சிக்கல் இல்லை. கடந்த முறை போல பரபரப்பாகக் காய்நகர்த்த வேண்டியதும் இல்லை. எனினும், இந்தத் தேர்தலில் முதன்முறையாகத் தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியிருக்கும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக அரசுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸைவிடவும் ஒரு தொகுதி அதிகம் வென்று மொத்தம் 6 தொகுதிகளை ஐக்கிய ஜனதா தளம் கைப்பற்றியது எப்படி என்று அலசிக்கொண்டிருக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். 2002 முதல் மணிப்பூரில் ஆட்சிசெய்த காங்கிரஸ் கட்சி, 2017 தேர்தலில் 28 இடங்களில் வென்றது. எனினும், 21 தொகுதிகளில் மட்டும் வென்றிருந்த பாஜக தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணியின் துணையுடன் ஆட்சியமைத்துவிட்டது. இந்தத் தேர்தலிலாவது காங்கிரஸ் தனது பலத்தை நிரூபிக்குமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் 5 தொகுதிகள்தான் அக்கட்சிக்குக் கிடைத்திருக்கின்றன.

மாறாக, இதற்கு முன்னர் அம்மாநிலத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிராத ஐக்கிய ஜனதா தளம் இந்த முறை 6 இடங்களில், 10.77 சதவீத வாக்குகளுடன் வென்றிருப்பதுதான் கவனிக்கத்தக்க விஷயம். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, பிஹாரில் ஆளுங்கட்சியாக இருக்கிறது. எனினும், மணிப்பூரில் இக்கட்சி தனித்துக் களம் கண்டது.

ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை (ஆஃப்ஸ்பா) திரும்பப் பெறும் கோரிக்கையை, பாஜக தவிர பிற கட்சிகள் முன்வைத்த நிலையில் ஐக்கிய ஜனதா தளமும் அதைப் பிரதானமாக முன்வைத்தது. கட்சிக்கு இதுவரை எந்தக் கெட்டப் பெயரும் இல்லாதது, களப் பணிகளில் அக்கட்சியினர் மிகுந்த கவனம் செலுத்தியது என்பன உள்ளிட்ட காரணிகள் மணிப்பூர் கணிசமான வாக்காளர்கள் மத்தியில் அக்கட்சி மீது நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது. குறிப்பாக, கரோனா பொதுமுடக்க காலத்தில் அத்தியாவசியப் பொருட்கள், நிவாரணப் பொருட்கள் போன்றவற்றை மக்களுக்கு வழங்கிய ஐக்கிய ஜனதா தளம் கட்சி நிர்வாகிகள் சிலர் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

அத்துடன், ஆளுங்கட்சி மீதான மக்கள் மனநிலையும் இந்தத் தேர்தலில் முக்கியப் பங்கு வகித்திருப்பதாகக் கருதப்படுகிறது. எனினும், பாஜகவுக்கு எதிராக வாக்களிக்க நினைத்தவர்கள் இந்த முறை காங்கிரஸுக்குப் பதிலாக ஐக்கிய ஜனதா தளத்துக்கு வாக்களித்திருக்கிறார்கள். அடிப்படை வசதிகள் அதிகம் பூர்த்திசெய்யப்படாத மணிப்பூர் போன்ற மாநிலங்களில், கட்சிக் கொள்கைகளைவிடவும், சமூகப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு மக்கள் வாய்ப்பளிக்கத் தயங்குவதில்லை. இந்த முறை அது ஐக்கிய ஜனதா தளத்துக்குச் சாதகமாகியிருக்கிறது.

2000-ல் முதன்முறையாக மணிப்பூரில் களம் கண்ட ஐக்கிய ஜனதா தளம், 18 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரே ஒரு தொகுதியில் வென்றது. 2002, 2007, 2012 என அடுத்தடுத்த தேர்தல்களில் போட்டியிட்டு ஒரு தொகுதியில்கூட அக்கட்சி வெல்லவில்லை. 2017 தேர்தலில் அக்கட்சி போட்டியிடவில்லை. இப்படியான பின்னணி கொண்ட ஒரு கட்சி இந்த முறை, முன்னாள் ஆளுங்கட்சியான காங்கிரஸைப் பின்னுக்குத் தள்ளும் அளவுக்கு வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில், பாஜகவின் பி-டீம் என்ற பார்வையும் ஐக்கிய ஜனதா தளம் மீது இருந்தது. அக்கட்சி சார்பாக வென்றிருக்கும் வேட்பாளர்கள், பாஜகவில் சீட் மறுக்கப்பட்டவர்கள் என்றும், தனிப்பட்ட செல்வாக்கு மூலம்தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றும் விமர்சிக்கப்படுகிறது.

பிஹார் முதல்வர் நிதீஷ் குமாரின் ஆட்சிக்குக் கிடைத்திருக்கும் நற்பெயரால், மாநிலத்துக்கு வெளியில் வெற்றி பெற முடிகிறது என்று அக்கட்சியினர் கருதுகிறார்கள். இதற்கு முன்னர் 2019 அருணாசல பிரதேசத் தேர்தலில் 7 தொகுதிகளில் அக்கட்சியினர் வென்றனர். எனினும், அக்கட்சியைச் சேர்ந்த 6 எம்எல்ஏ-க்கள் பின்னர் பாஜகவில் சேர்ந்தது தனிக்கதை.

ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏ-க்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்களைத் தங்கள் கட்சியிலேயே பாஜக தலைமை சேர்த்துக்கொண்டதால் ஐக்கிய ஜனதா தளம் தலைவர்கள் ஆத்திரமடைந்தனர். “இது கூட்டணி தர்மத்துக்கு அழகல்ல” என்று குமுறினர். அரசியலில்தான் எவ்வளவு விரைவாக மாற்றங்கள் நடக்கின்றன!

SCROLL FOR NEXT