அரசியல்

`ஜெர்மனி பல்கலையில் தமிழ் பிரிவு மூடப்படுவதை தடுக்கவும்'- முதல்வரை வலியுறுத்தும் ஜவாஹிருல்லா

காமதேனு

`ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ் பிரிவு மூடப்படாமல் இருக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், `ஜெர்மனியில் பழம்பெருமை வாய்ந்த கொலோன் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் துறையில் தமிழ் பிரிவும் சேர்க்கப்பட்டுச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்தப் பிரிவில் 50 ஆயிரம் மேற்பட்ட பழம்பெரும் தமிழ் நூல்களும் ஓலைச்சுவடிகளும் இருப்பதாகத் தெரிகிறது. நிதிச்சுமை காரணமாக 2020-ல் இந்த பிரிவு மூடும் சூழ்நிலை உருவானது. இதனை மனிதநேய மக்கள் கட்சி தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றதாலும், வெளிநாட்டு வாழ் தமிழ் ஆர்வலர்களின் உதவியாலும் தமிழக முதலமைச்சர் அளித்த 1.25 கோடி ரூபாய் வழங்கி பல்கலைக்கழகத்தின் தமிழ் பிரிவு காப்பாற்றப்பட்டது.

தற்போது மீண்டும் நிதிச்சுமை காரணமாகத் தமிழ் பிரிவு மூடப்படும் ஆபத்தில் இருப்பதாகப் பேராசிரியர் ஸ்வென் கூறியிருப்பதாக இந்து தமிழ் திசை நாளிதழில் செய்தி வெளிவந்துள்ளது. இது தமிழ் ஆர்வலர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்குப் பல்கலைக்கழகத்தின் இதர துறைகளுடன் இணைந்து தமிழையும் அடிப்படையாக்கி ஒரு ஆய்வு நிறுவனத்தை அமைக்க அந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் திட்டமிட்டு இருப்பதாகத் தெரிகிறது. எனவே, தமிழ் பிரிவைக் காப்பதற்கு ஒரு நபரை நியமிப்பதுடன் போதிய நிதி உதவியையும் வழங்கி அந்த பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான இருக்கையை அமைக்கத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT