அமைச்சர் சக்கரபாணி
அமைச்சர் சக்கரபாணி கோதுமை, மண்ணெண்ணெய்யை குறைத்துவிட்டது மத்திய அரசு: அமைச்சர் சக்கரபாணி!
அரசியல்

கோதுமை, மண்ணெண்ணெய்யை குறைத்துவிட்டது மத்திய அரசு: அமைச்சர் சக்கரபாணி!

காமதேனு

``தமிழ்நாட்டிற்கான கோதுமை, மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்திருப்பது வேதனையளிக்கிறது. இதனால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். முதலமைச்சரின் அனுமதி பெற்று, மத்திய அமைச்சரை நேரடியாக சந்தித்து வலியுறுத்துவோம்'' என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசுக்கு வழங்கி வந்த மண்ணெண்ணெய், கோதுமை ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துள்ளது. இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் உணவு மற்றும் உணவுபொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘’தமிழகத்தில் இன்றைக்கும் மண்ணெண்ணெய் பயன்படுத்தும் குடும்பங்கள் உள்ளன. குறிப்பாக ஏற்காடு, கொடைக்கானல் போன்ற மலைபிரதேச பகுதிகளில் ஒதுக்கீடுகள் அடிப்படையில் வழங்கி வருகிறோம்.

மண்ணெண்ணெய் வழங்குவது என்பது மத்திய அரசின் கீழ் வருகிறது. ஏப்ரல் மாதம் 4 ஆயிரம் கிலோ லிட்டராக மண்ணெண்ணெய் குறைக்கப்பட்டது. தமிழகத்துக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டு அளவை மத்திய அரசு குறைத்துள்ளது. ஆனால் தமிழக அரசு மண்ணெண்ணெய் வழங்குவதை குறைத்துவிட்டதாக தோற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2021ல் 7,510 கி.லிட்டராக இருந்த மண்ணெண்ணெய் ஒதுக்கீடு கடந்த ஆண்டு ஏப்ரலில் 4,000 கி.லிட்டராக குறைக்கப்பட்டு தற்போது 2,012 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே மத்திய அரசு வழங்கி வருகிறது. மத்திய அரசுக்கு 2 முறை கடிதம் எழுதியும் அதை கருத்தில் கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. தமிழ்நாட்டுக்கு தற்போது 9 ஆயிரம் கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் தேவை உள்ளது. மண்ணெண்ணெய், கோதுமை தேவையான அளவு ஒதுக்கக்கோரி மத்திய அமைச்சரிடம் நேரில் வலியுறுத்துவோம்’’ என்றார்.

SCROLL FOR NEXT