மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாட்டில் தமிழக முதல்வரும், கேரள முதல்வரும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாட்டில் தமிழக முதல்வரும், கேரள முதல்வரும். 
அரசியல்

பாஜகவிற்கு எதிராக ஸ்டாலின் தலைமையில் அணிசேர்க்கை சாத்தியமா?

கவிதா குமார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது அகில இந்திய மாநாடு கேரள மாநிலம், கண்ணூரில், ஏப்ரல் 6-ம் தேதி துவங்கி நேற்று வரை நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் இருந்து கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்களாக ஜி.ராமகிருஷ்ணன், கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, பி.சம்பத், பெ.சண்முகம், ஆர்.கருமலையான் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதில் இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) தேசிய செயலாளரான ஆர்.கருமலையான் முதன் முறையாக கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராக தேர்வாகியுள்ளார். அவரிடம் அகில இந்திய மாநாடு குறித்தும், வர உள்ள நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் பேசினோம்.

மார்க்சிஸ்ட் அகில இந்திய மாநாட்டில் சீதாராம் யெச்சூரி, பினராயி விஜயன்

அகில இந்திய மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள் அதிகம் விவாதித்த விஷயம் என்னவாக இருந்தது?

கண்ணூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாடு நாட்டின் அரசியல் திசைவழியைத் தீர்மானிக்கிற மாநாடாக நடைபெற்றது. ஏனெனில், மற்றவர்கள் நடத்தும் மாநாடு போல, இது மகுடம் சூட்டும் ஏற்பாடல்ல. ஒரு தேசத்தின் நிலவரத்தைப் பற்றி ஒரு திட்டவட்டமான ஆய்வுகளை மேற்கொண்டு இந்த தேசத்தில் எது சவால், அதை எப்படி எதிர்கொள்வது, நாட்டின் பொது சவால் என்பது தான் மாநாட்டின் விவாதத்தின் மையமாக இருந்தது.

இந்தியாவில் பொது சவால் என்பது வலதுசாரி பிற்போக்குத்தனமான பாஜக தலைமையிலான கூட்டணியோடு வகுப்புவாத கார்ப்பரேட் கூட்டு அச்சமூட்டுவதாக மாறியுள்ளது. இந்த சவாலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து மாநாட்டில் மதிப்பீடு செய்யப்பட்டது. 2019-ம் ஆண்டுப் பிறகான மோடி ஆட்சி இந்திய அரசியல் கட்சிகளுக்குப் புதிய சவாலைக் கொடுத்திருக்கிறது என்பது தான் மாநாட்டின் விவாதத்தின் மையக்கருவாக இருந்தது. அதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தீர்மானம் என்ற அரசியல் நடைமுறை உத்தி தீர்மானிக்கும். இந்த நடைமுறை உத்தியையும், அதை நடைமுறைப்படுத்தவும் அரசியல் தலைமைக்குழு, மத்தியக்குழு என்ற அமைப்பு நிலையை மார்க்சிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாடு தேர்வு செய்துள்ளது.

மாநாட்டில் கொடியேற்றப்படுகிறது.

கடந்த காலங்களை விட பாஜக தற்போது வலுப்பெற்றுத்தானே இருக்கிறது?

உலக முதலாளித்துவ அமைப்பே தற்போது கடும் நெருக்கடி நிலையில் உள்ளது. எல்லா மூன்றாம் உலக நாடுகளிலும், ஏன் வளர்முக நாடுகளிலும் உலக வங்கி, வளர்ச்சி விகிதத்தை மதிப்பீட்டைக் குறைத்துள்ளது. இதன் உபவிளைவாக மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்து விட்டது. இவர்களிடம் எப்படி வெற்றி பெறுவது என்பதற்காகத்தான் மக்களை சூடேற்றும் அஜண்டாக்களை பாஜக வைத்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக ஹிஜாப், ஹலால் என ஏதாவது ஒரு விஷயத்தை வைத்து மக்களின் துன்ப துயரங்களில் இருந்து அவர்களை மடைமாற்றம் செய்யும் ஏற்பாட்டை வலதுசாரி அமைப்பு தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.

கடுமையான விலைவாசி உயர்வு, 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை ஆகியவைப் பற்றி மக்கள் சிந்திப்பதற்குள் மதம், சாதி சார்ந்த சில விவாதங்கள் அவர்கள் முன் வைக்கப்படுகிறது. இவற்றையெல்லாம் பாஜகவிற்கு வாக்களித்த மக்கள் உணரத் துவங்கியுள்ளனர். உத்தரபிரதேசத்தில் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்று திரண்டிருந்தால் யோகி இமேஜ் தகர்ந்திருக்கும். அத்துடன் பழைய கெத்தில் உபியில் யோகி வெற்றி பெற முடியவில்லை. கஷ்டப்பட்டுத்தான் வெற்றி பெற்றுள்ளார். வலுதுசாரி கருத்தோட்டம் நீண்ட நாள் ஆட்சி செய்ய முடியாது. மக்கள் சொந்த அனுபவத்தில் இருந்தே மாற்றைத் தேடுவார்கள். தமிழகத்தில் திமுகவை உணர ஆரம்பித்தது போல அணி , ஒடிசா, உபி , பிஹார் மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர்.

மத்திய அரசுக்கு எதிராக தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அணிசேர்க்கை சாத்தியமா?

மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சி மாநில மாநாட்டு பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ' மதச்சார்பற்ற கட்சிகளுக்கு ஸ்டாலின் தலைமை ஏற்க வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்தார். ஏனெனில், இப்போது பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ், மம்தா, இடதுசாரி கட்சிகள் கூட்டம் போட்டால் சிலர் வருவதில்லை. இதன் காரணமாகத்தான் எல்லோரையும் இணைக்கிற முன் கையை திமுக எடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி விரும்புகிறது. தேர்தலுக்கு முன் இது நடக்குமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

இந்தியாவில் தேர்தலுக்குப் பிந்ததைய கூட்டணி வெற்றி பலமுறை பெற்றுள்ளது. எனவே, அதற்காக இந்தியா முழுவதும் உள்ள பிராந்திய கட்சிகள், தேசிய கட்சிகள், மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கிற மையப்புள்ளி தேவைப்படுகிறது. அதை இணைக்கிற பணியைத் தமிழக முதல்வர் ஸ்டாலின், நல்ல முறையில் செய்ய முடியும். அதற்கான வாய்ப்பும் இருக்கிறது. அந்த அணிசேர்க்கைக்கான ஒரு பகுதியாகத்தான் திமுக டெல்லி அலுவலகத் திறப்புவிழாவையும், மார்க்சிஸ்ட் கட்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றதையும் பார்க்கிறேன்.

ஆர்.கருமலையான்.

அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி சரிந்துள்ளது. ஆம் ஆத்மி தலைமையை ஏற்கத் தயார் என ப.சிதம்பரம் கூறுகிறார். இந்த நிலையில் மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து மத்திய அரசை உருவாக்க வாய்ப்பு உள்ளதா?

வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஒத்தக்கருத்துள்ளவர்களை இணைக்க மார்க்சிஸ்ட் கட்சி விரும்புகிறது. மாநில உரிமை, மதச்சார்பின்மை, மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு, சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு, மக்களின் அன்றாட வாழ்நிலை போன்ற பொதுவான அம்சங்களில் ஒன்று சேர்கிற ஏற்பாடு தான் இது. தெலங்கானா, ஆந்திரா, மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், பிஹார் மாநிலங்கள் இதில் ஒன்று சேரும். இதற்கான இணைப்பைப் பணியை அரசியல் ஸ்திரத்தன்மையோடு திமுகவால் செய்ய முடியும். டெல்லி போன்ற மாநகராட்சி அளவிலானப் பகுதியில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மியால் அப்படி செய்வது சிரமம். இந்த செயல்பாடுகள் நேர்கோட்டில் நடக்கும் நிகழ்வுகள் அல்ல. அவ்வப்போது ஏற்படும் அரசியல் நிலைமைகளுக்கு ஏற்ப மாறுபடும்.

பாஜக பிரதமர் வேட்பாளரை முன் நிறுத்துவதைப் போல மற்ற கட்சிகளால் முன் நிறுத்தாதது பலகீனம் தானே?

தற்போது இந்திய கார்ப்பரேட் முதலாளிகள் நினைத்தால் ஒரு பிரதமரை உருவாக்க முடியும். ஏனெனில், கருத்தியலை உருவாக்கும் இடத்தில் அவர்கள் தான் இருக்கிறார்கள். ஆனால், கடந்த 30 ஆண்டு கால இந்திய அரசியலில் மன்மோகன் சிங், வி.பி.சிங், ஐ.கே.குஜ்ரால் போன்றவர்கள் பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்தப்படாமல் அவர்களால் எப்படி ஆட்சி செய்ய முடிந்தது? எனவே, இந்தியாவில் இதுபோல நடக்கவில்லையென்பது போன்று மோடி என்ற ஐகானை சித்தரிப்பதே கார்ப்பரேட்டுகளின் ஒரு வகையான தந்திரம் தான். மோடி என்ற பிம்பம் சிதைந்து கொண்டிருப்பதால் நாளையே வேறு ஒருவரை அந்த நாற்காலியில் அவர்களால் அமர வைக்க முடியும். ஆனால், வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய முடிவுகள் கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பான செய்தியாக இருக்காது.

SCROLL FOR NEXT