முதல்வரிடம் தங்கள் முடிவை வலியுறுத்தும் எம் எல் ஏக்கள்
முதல்வரிடம் தங்கள் முடிவை வலியுறுத்தும் எம் எல் ஏக்கள் 
அரசியல்

பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலைச் சந்திக்கத் தயாரா?; பாஜகவிற்கு சவால் விடும் என்.ஆர்.காங்கிரஸ்: திகு திகுக்கும் புதுவை அரசியல்

கரு.முத்து

புதுச்சேரியில் ஆளும்  என்.ஆர் காங்கிரஸ் -  பாஜக கூட்டணியில் வெளிப்படையான  கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் என் ஆர் காங்கிரஸ் அரசாங்கம்  என்ன ஆகப் போகிறது என்ற கேள்வி மக்கள் மத்தியில்  எழுந்துள்ளது. 

புதுச்சேரியில் 10 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட என்.ஆர். காங்கிரஸ் அரசாங்கத்திற்கு பாஜக ஆதரவு தெரிவித்து அமைச்சரவையிலும் இடம் பெற்றிருக்கிறது. ஆனால்,  அண்மைக்காலமாக இரண்டு கட்சிகளும் மோதல் போக்கைக் கடைபிடித்து வருகின்றன. 

கடந்த சட்டமன்றத் கூட்டத்தில் பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் மற்றும் பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ அங்காளன்  ஆகியோர்  முதல்வர் ரங்கசாமியையும், அரசையும் வெளிப்படையாக புகார் தெரிவித்தும் குற்றம் சாட்டியும் பேசினர்.  

அதன் பின்னர் ஓரிரு நாட்களுக்கு  முன்  முதலமைச்சர் ரங்கசாமி பதவி விலக வலியுறுத்தி  சட்டமன்ற வாயிலில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத  போராட்டத்தில் பாஜக  சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் ஈடுபட்டார்.  காலாப்பட்டு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம், அங்காளனுக்கு ஆதரவு தெரிவித்து அந்த  போராட்டத்தில்  கலந்து கொண்டார்.

இதற்கு முதல்வர் ரங்கசாமி  எந்தவிதமான கருத்தும் தெரிவிக்காத நிலையில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ முன்வைத்த விமர்சனமும், அதற்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஆதரவு தெரிவித்திருப்பதும் என். ஆர். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஏற்கெனவே புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முதல்வருக்கு எந்த அதிகாரமும் இல்லாதபடி அரசின் அனைத்து திட்டங்களையும் தொடக்கி வைத்து வருகிறார்.  அரசு விழாக்கள் பெரும்பாலானவற்றில் அவரே முன்னிலைப்படுத்தப்படுகிறார்.  முக்கியமான அறிவிப்புகள் பலவும்  அவரால் வெளியிடப் படுகிறது என்கிற வருத்தத்தில் இருந்து வருகின்றனர். 

இந்த நிலையில் பாஜக  சட்டமன்ற உறுப்பினர்களும் அரசுக்கு எதிராக பேசி வருவதையடுத்து என்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள்  அதற்கு எதிர்வினையாற்ற ஆரம்பித்து விட்டார்கள்.  என்.ஆர்.காங்கிரஸ்  கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு கொறடா ஏ.கே.டி ஆறுமுகம் தலைமையில், சட்டப்பேரவையில் உள்ள அமைச்சர் லட்சுமிநாராயணன் அலுவலகத்தில் கூடி   நேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.  இதில் ஆறுமுகம், ரமேஷ், லட்சுமிகாந்தன், பாஸ்கர், திருமுருகன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.   

தற்போதைய நிலைமை குறித்து கலந்து ஆலோசித்த  இவர்கள் இனியும் தங்களால் பொறுக்க முடியாது என்று முடிவுக்கு வந்தனர். அதனால்  தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து என்.ஆர் காங்கிரஸ் வெளியேற வேண்டும் என்ற முடிவை எடுத்தனர்.  தங்களது ஆலோசனையில் எடுக்கப்பட்ட  இந்த முடிவை உடனடியாக முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து தெரிவித்தனர்.  

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அரசு கொறடா ஆறுமுகம் "பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக எம்எல்ஏக்கள் மீண்டும் தேர்தலை சந்திக்க தயாரா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.  இதற்கு பாஜகவினர் இன்றைக்கு பதில் சொல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக - என்.ஆர். காங்கிரஸ் இடையேயான இந்த மோதல்  எங்கே போய் முடியப் போகிறதோ என்ற கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள் புதுச்சேரி மக்கள். 

SCROLL FOR NEXT