அரசியல்

கவனிக்காமல் விடப்படுகிறாரா கலைஞரின் மகள்?

டி.கார்த்திக்

திமுகவில் உதயநிதியை புரோமோட் செய்யும் விஷயங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், இன்னொரு புறம் கனிமொழி புறக்கணிப்படுகிறார் என்ற தகவல்களும் உலா வரத் தொடங்கியுள்ளன. திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த மு.க. ஸ்டாலின் எந்த அளவுக்கு கடந்த 10 ஆண்டுகளாக உழைப்பைக் கொடுத்தாரோ, அதே அளவுக்குத் தன் பங்குக்கு உழைத்தவர் கனிமொழி. ‘தலைவரின் மகள்’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட கனிமொழி விஷயத்தில் திமுகவில் என்ன நடக்கிறது?

தொடக்கக் காலத்தில் கருணாநிதியின் இலக்கிய வாரிசாகவே அறியப்பட்டவர் கனிமொழி. திமுக தலைவர், முதல்வரின் மகள் போன்ற அடையாளங்கள் இருந்தாலும், இலக்கியம், புத்தக வாசிப்பு, பத்திரிகையாளர் என்ற அளவில்தான் இருந்தார் கனிமொழி. அரசியலுக்கு அப்பால் துரத்தில் இருந்த அவரை, திமுகவினர் மத்தியில் பெரிய அளவில் கொண்டு சென்று பேச வைத்தது ஒரே ஒரு புகைப்படம்தான்.

கருணாநிதி கைதின் போது...

2001-ம் ஆண்டில் நள்ளிரவில் கருணாநிதியைத் தரதரவென இழுத்துச் சென்று போலீஸார் கைது செய்த வீடியோ, எந்த அளவுக்கு திமுகவினர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியதோ, அதே அளவுக்கு சென்னை மத்திய சிறைச்சாலை வாசலில் தரையில் கருணாநிதி உட்கார்ந்திருந்த படமும் தொண்டர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. அந்தப் புகைப்படத்தில் கருணாநிதி அருகே கனிமொழியும் தரையில் உட்கார்ந்திருந்தது, கனிமொழியின் மீது திமுக தொண்டர்கள் மத்தியில் மதிப்பையும் மரியாதையையும் அதிகப்படுத்தியது.

ஒரு தந்தைக்கு துயரம் நேர்ந்த வேளையில், மகன்களும் இருக்க முடியாத சூழலில் மகள் கனிமொழி உடனிருந்தது, தந்தை - மகள் என்ற ஸ்தானத்தைத் தாண்டி கட்சிக்கும் அவருக்கும் ஒரு பிணைப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகும்கூட, தான் உண்டு தன் வேலை உண்டு என்றே கனிமொழி இருந்தாலும், அவரை அரசியலுக்கு இழுத்து வந்தது குடும்பத்தின் அழுத்தம்தான். ஒரு பக்கம், மகளுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற பாதுகாப்பு உணர்வில் ராஜாத்தியம்மாள் தந்த அழுத்தம். இன்னொரு பக்கம், கருணாநிதியே அதை விரும்பினார். முரசொலி மாறன் மறைவுக்குப் பிறகு அந்த இடத்தில் வைத்துப் பார்க்கப்பட்டார் தயாநிதி மாறன். ஆனால், 2007-ல் மாறன் சகோதரர்களின் பத்திரிகையில் வெளியான ‘அழகிரி, ஸ்டாலின் இவர்களில் செல்வாக்கு யாருக்கு?’ என்ற கருத்துக்கணிப்பால் குடும்பத்துக்குள் பூகம்பம் வெடித்தது. தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து இறக்கப்பட்டார்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு தன்னுடைய குடும்பத்திலிருந்தே ஒருவர் டெல்லியைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார் கருணாநிதி. அதற்கு ஆங்கிலப் புலமையுள்ள கனிமொழிதான் சரியான நபர் என்று நினைத்தார் அவர். இதன் பிறகுதான், மாநிலங்களவை எம்பியாக டெல்லிக்கு கருணாநிதியால் அனுப்பி வைக்கப்பட்டார் கனிமொழி.

கனிமொழி டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டதால் மு.க.ஸ்டாலினும் அதை ஆதரித்தார். தமிழகக் களத்தில் கருணாநிதியின் அரசியல் வாரிசாக ஸ்டாலின் இருந்ததால், அந்த இடத்துக்கு இன்னொரு வாரிசு வரக்கூடாது என்றுதான் ஸ்டாலின் குடும்பத்தினரும் இருந்தனர். அந்த வகையில் கனிமொழியை டெல்லிக்கு அனுப்பியதால், ஸ்டாலின் குடும்பத்தினரும் கருணாநிதியின் முடிவுக்கு ஆதரவாகவே இருந்தனர்.

ஆனால், 2011-ல் 2ஜி விவகாரம் பூதாகரமான வேளையில், திமுக பெரும் தலைக்குனிவை சந்திக்க நேர்ந்தது. அதனால், கனிமொழியும ஒரு நெருக்கடி வளையத்துக்குள் சிக்க நேர்ந்தது. அதிலிருந்து விடுபட்டுதான் இன்றுவரை கனிமொழி அரசியலில் நீந்திக்கொண்டிருக்கிறார். 2014-ல் மு.க. அழகிரி திமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, ஸ்டாலின், கனிமொழி என்ற கருணாநிதியின் இரண்டு வாரிசுகள் மட்டுமே அரசியலில் இருக்கிறார்கள் என்ற நிலையும் ஏற்பட்டது.

10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி தமிழகத்தில் இருந்த நிலையில், ஸ்டாலினைப் போலவே இன்னொரு பக்கம் தீவிரமாகக் கட்சிப் பணியாற்றினார் கனிமொழி. ஸ்டாலின் ஒருபக்கம் சென்றார் என்றால், கனிமொழி இன்னொரு பக்கம் சுழன்றார். பல்வேறு காரணங்களால் கட்சியிலிருந்து ஒதுங்கிநின்ற பழைய நிர்வாகிகளை எல்லாம், நான் தலைவரின் மகள் வந்திருக்கிறேன் என்று தேடிப் போய் சந்தித்தார் கனிமொழி. அவரது அணுகுமுறையால், கட்சியே வேண்டாம் என்று இருந்த பலரும் மீண்டும் கரைவேட்டி கட்ட ஆரம்பித்தார்கள். கருணாநிதி ஆக்டிவாக இருந்தவரை கனிமொழிக்குக் கட்சியில் பிடிமானம் இருந்தது. எதுவாக இருந்தாலும் கருணாநிதியிடம் கொண்டு சென்று முடிவுகளை மாற்றும் அளவுக்கு, அப்பாவின் செல்லப் பிள்ளையாக இருந்தார் கனிமொழி.

உதாரணமாக, 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் சீர்காழி தொகுதியில் துர்கா ஸ்டாலின் சிபாரிசில் வேட்பாளராக முடிவான பன்னீர்செல்வத்தின் பெயரை அடித்துவிட்டு, அந்த இடத்தில் தனது ஆதரவாளரான கிள்ளை ரவீந்திரன் பெயரை கனிமொழியால் சேர்க்க முடிந்தது. அப்படிச் செல்வாக்கோடு ‘தலைவரின் மகள்’ என்றழைக்கப்பட்ட கனிமொழிக்கு, இப்போது அதுபோன்ற பிடிமானங்கள் எதுவும் இல்லை என்ற குரல்கள் கனிமொழி ஆதரவாளர்கள் மத்தியில் எழத் தொடங்கியிருக்கிறது.

அண்மைக் காலமாக, கட்சிக்குள் கனிமொழி காரணமே இல்லாமல் ஒதுக்கப்படுகிறார் என்ற பேச்சுகளும் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. ஏற்கெனவே அழகிரி ஓரங்கட்டப் பட்டதைப் போல, கருணாநிதி மறைவுக்குப் பிறகு கனிமொழியும் கண்டுகொள்ளாமல் விடப்பட்டுவருகிறார் என்கிறார்கள் கனிமொழி ஆதரவாளர்கள்.

உதயநிதி, ஸ்டாலின், சபரீசன்

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அவர்கள், “இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்த கனிமொழி மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பியபோது, அவருக்குத் தூத்துக்குடியை கட்சி தலைமை ஒதுக்கியது. அதற்கு முன்பாகவே, நாடார் வாக்குகள் அதிகம் உள்ள தூத்துக்குடி தொகுதிதான் கனிமொழிக்கு பாதுகாப்பான தொகுதி என திட்டமிட்டு கட்டமைத்து விட்டார்கள்.

சென்னையில் வசிக்கும் அவருக்கு தென் சென்னை அல்லது வட சென்னை தொகுதியைக்கூட ஒதுக்கியிருக்க முடியும். ஆனால், திட்டமிட்டே அவரை மாநிலத்தின் தென்கோடியான தூத்துக்குடிக்கு அனுப்பிவிட்டார்கள். ஒன்று, கனிமொழி டெல்லியில் இருக்க வேண்டும். தமிழகம் வந்தால் தூத்துக்குடியில் இருக்க வேண்டும் என்று சிலர் நினைத்ததே இதற்குக் காரணம்.

2019 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு திமுகவில் உதயநிதி வரவுக்குப் பிறகு எல்லாமே மாறிவிட்டது. அதற்கு முன்புவரை ஸ்டாலினுக்கு அடுத்த இடத்தில் கனிமொழி மதிக்கப்பட்டார். ஆனால், தற்போது அந்த இடம் உதயநிதிக்கு சென்றுவிட்டது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்ததன் மூலம், கட்சியின் ரிமோட் கன்ட்ரோல் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் கைக்குச் சென்றது. இப்போதும் உதயநிதி - சபரீசன் ஆதிக்கம் கட்சியில் உள்ளது. கனிமொழி என்னதான் மகளிரணி செயலாளராக இருந்தாலும், அது இளைஞர் அணி அளவுக்கு முக்கியத்துவம் பெறவில்லை” என்று சொன்னார்கள்.

கனிமொழி ஆதரவாளர்கள் ஆதங்கப்படுவது போலவே, உதயநிதியை திமுகவில் அடுத்தக் கட்டத்துக்கு அவசரமாய் நகர்த்திச் செல்லும் வேலைகளை ஸ்டாலின் குடும்பத்தினர் தொடங்கியுள்ளனர். அதன் விளைவாகத்தான் உதயநிதிக்கு அமைச்சர் பதவி, துணை முதல்வர் பதவி என்றெல்லாம் பேச்சுகள் திமுகவில் கிளம்பியுள்ளன. ‘திமுகவை அடுத்து வழி நடத்தப்போகும் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்’ என்று சொல்லும் அளவுக்கு, திமுகவில் உதயநிதி ஆதரவுக் கோஷங்கள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு மகளிரை கட்சியில் சேர்க்கும் விஷயத்தில் உதயநிதிக்கும் கனிமொழிக்கும் இடையே உரசல் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். மகளிரை கட்சியில் சேர்க்கும் விஷயத்தில் உதயநிதி மூக்கை நுழைப்பதைத் தடுக்கும் விதமாக, கனிமொழி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தது அரசியல் ரீதியாக விமர்சனங்களை எழுப்பியது.

இதற்கிடையே கனிமொழி புறக்கணிப்பு என்ற இன்னொரு தகவலும் கனிமொழி ஆதரவாளர்களால் முன் வைக்கப்படுகிறது. கருணாநிதியின் முந்தைய ஆட்சிக் காலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சி, கனிமொழியால் முன்னெடுக்கப்பட்டது. நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் இந்த நிகழ்ச்சியை அரசு உதவியுடன் நடத்திக் காட்டினார் கனிமொழி.

கடந்த 10 ஆண்டுகளாக ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சி நடைபெறவில்லை. திமுக ஆட்சி மீண்டும் வந்துள்ள நிலையில், ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சியை நடத்த கனிமொழி முயற்சி செய்கிறார் என்று தகவல்கள் வெளியாயின. ஆனால், ‘நம்ம ஊர் திருவிழா’ என்ற பெயரில் ஜனவரி 14 - 16 வரை சென்னையில் 7 இடங்களில் நடத்தப்படும் என்று தமிழக அரசே அறிவிப்பு வெளியிட்டது.

மேலும், மதுரை, திருச்சி, கோவையிலும் இந்த விழா நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் காரணமாக இது நடைபெறுமா என்பது கேள்விக்குறிதான் என்றாலும் இதுதொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில்கூட முன் அனுபவம் உள்ளவர் என்ற அடிப்படையில் கனிமொழி அழைக்கப்படவில்லை என்று கனிமொழி ஆதரவாளர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

கருணாநிதி இருந்தபோது திமுகவில் ஸ்டாலினுக்கு அடுத்த இடத்தில் இருந்த கனிமொழி, தற்போது கட்சித் தலைவர்களில் ஒருவராக அடையாளப்படுத்தும் அளவுக்கு மாறி இருப்பதை எதார்த்தமானதுதான் என எளிதாகக் கடந்துவிட முடியாது.

SCROLL FOR NEXT