ரப்பர் பால்
ரப்பர் பால்  இதை செய்தால் பாஜகவுக்கு ஓட்டுப் போடுவோம்: பிஷப் பேச்சால் அரசியல் கட்சிகள் அதிர்ச்சி
அரசியல்

இதை செய்தால் பாஜகவுக்கு ஓட்டுப் போடுவோம்: பிஷப் பேச்சால் அரசியல் கட்சிகள் அதிர்ச்சி

காமதேனு

கேரளத்தில் வலுவாக கிறிஸ்தவ வாக்குகள் உள்ளன. அதனாலேயே பாஜகவால் அங்கு காலூன்றவும் முடியவில்லை. இந்த நிலையில் பாஜகவுக்கு வாக்களிக்கத் தயார் என கேரளத்தில் கத்தோலிக்க சபையின் ஆயர் பேசியிருப்பது காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சியினரை டென்ஷன் ஆக்கி உள்ளது.

இந்தியாவிலேயே அதிகளவில் ரப்பர் உற்பத்தி கேரளத்தில் தான் நடக்கிறது. இங்குள்ள கோட்டயம் சந்தை ரப்பர் விலையை நிர்ணயிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆனால் ரப்பருக்கான விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் உற்பத்திச் செலவை ஈடுகட்டுகின்றதே தவிர பெரிய லாபம் இல்லை. இந்த நிலையில் தான், கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம், ஆலக்கோடு பகுதியில் கத்தோலிக்க விவசாயிகள் மாநாடு நேற்று மாலை நடைபெற்றது.

இதில் தலசேரி பிஷப்மார் ஜோசப் மாம்பிலானி பேசும்போது, “தேர்தலில் வாக்காக மாறாத எவ்வித போராட்டத்திற்கும் ஜனநாயகத்தில் மதிப்பு இல்லை. மத்திய பாஜக கட்சியின் கொள்கை எதுவாகவும் இருக்கட்டும். ஆனால் நாங்கள் உங்களை ஓட்டு போட்டு வெற்றிபெற வைக்கிறோம். ஆனால் ஒரு நிபந்தனை. ரப்பர் ஷீட் ஒரு கிலோ 300 ரூபாய் என உயர்த்தித் தாருங்கள். கேரளத்தில் ஒரு எம்.பியும் பாஜகவுக்கு இல்லை என்ற நிலையை இந்த விவசாயிகள் மாற்றிக்காட்டுவார்கள்” என்றார்.

இப்போது கேரளத்தில் ஒரு கிலோ ரப்பர் அதன் தரத்தைப் பொறுத்து கிலோ 120 முதல் 130 வரை கொள்முதல் செய்யப்படுகின்றது. கண்ணூர் மாவட்டம் தான் கேரள முதல்வர் பினராயி விஜயனின் சொந்த ஊர். அந்த பகுதியிலேயே பிஷப் பாஜகவை ஆதரிப்போம் என பேசியது அரசியல் கட்சியினராலும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT