ராகுல் காந்தி
ராகுல் காந்தி அதானியை பிரதமர் மோடி பாதுகாக்கிறார்
அரசியல்

அதானியை பிரதமர் மோடி பாதுகாக்கிறார்... இல்லையென்றால்? - மீண்டும் தாக்கும் ராகுல் காந்தி

காமதேனு

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பிரதமர் நரேந்திர மோடியின் இன்றைய பேச்சு பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது என்று ராகுல் காந்தி கூறினார். மேலும், அதானி நிறுவனத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைக்கு அழைப்பு விடுக்காததற்காகவும் பிரதமர் மோடியை அவர் கடுமையாக சாடினார்.

நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "அதானி விவகாரம் தொடர்பாக மக்களவையில் நான் பேசியதனால் பிரதமர் அதிர்ச்சியடைந்தார். என்னுடைய எந்தக் கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை. மேலும், நான் எந்த சிக்கலான கேள்விகளையும் கேட்கவில்லை. கௌதம் அதானி பிரதமருடன் எத்தனை முறை சென்றார், எத்தனை முறை சந்தித்தார் என்றுதான் நான் கேட்டேன்.

பிரதமரின் உரையில் நான் திருப்தி அடையவில்லை. ஆனால் அது விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற உண்மையை வெளிப்படுத்துகிறது. அவர்கள் நண்பர்களாக இல்லாவிட்டால், விசாரணை நடத்தப்படும் என்று பிரதமர் ஒருமுறை கூறியிருக்க வேண்டும். பாதுகாப்புத் துறையில் பினாமி கணக்குகள் மற்றும் ஷெல் நிறுவனங்கள் மூலம் புழக்கத்தில் உள்ள பணம் குறித்து பிரதமர் பேசவில்லை. பிரதமர் அவரைப் பாதுகாக்கிறார் என்பதை இது காட்டுகிறது. இது தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் உள்கட்டமைப்பை உள்ளடக்கியது. விசாரணை நடத்தப்படும் என்று பிரதமர் கூறியிருக்க வேண்டும். ஆனால் அவர் ஏன் செய்யவில்லை என்பது எனக்குப் புரிகிறது" என்று தெரிவித்தார்

ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் வேகமாக சரிந்தன. இது தொடர்பாகவும், அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் உள்ள தொடர்பு குறித்தும் பல்வேறு கேள்விகளை நேற்று ராகுல் காந்தி எழுப்பினார். அதற்கு பதிலளிக்கும் வகையில் இன்று பிரதமர் மோடி மக்களவையில் பேசினார்.

SCROLL FOR NEXT