மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின் 
அரசியல்

‘மினிட் புத்தகத்தை நானே பார்ப்பேன்... வார்த்தைகளில் கவனம் தேவை!'

காமதேனு

“மினிட் புத்தகத்தை நானே பார்ப்பேன், பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை” என திமுகவினருக்கு அறிவுறுத்தியிருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

சென்னை அமைந்தகரையில் இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் இரண்டாவது முறையாக அக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

நிகழ்ச்சியில் பேசுகையில், “பொதுக்குழு உறுப்பினர்களை, கோடி தொண்டர்களின் வடிவமாகவே பார்க்கிறேன். இங்கு இருக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் இரண்டாயிரம் தொண்டர்களுக்குச் சமம். திமுக உறுப்பினர் அட்டை வைத்திருக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் மதிப்புக்கு உரியவர்கள். அவர்களால்தான் நாம் பொறுப்புக்கு வந்திருக்கிறோம். 70 ஆண்டுகளுக்கு முன்பு இயக்கம் தொடங்கியபோது இருந்த அதே சுறுசுறுப்போடு இயங்கி வருகிறோம். அண்ணா மறைவுக்குப் பின்பு கருணாநிதி அரணாக இருந்து கழகத்தைக் காத்தார். அவரின் மரணத்திற்குப் பின்பு இந்த எளியவனின் தலையில் பொறுப்பு வந்தது. 50 ஆண்டுகாலம் இந்த இயக்கத்தை வளர்த்து, காத்துவந்த கருணாநிதியின் கருப்பு, சிவப்புப் படையை நான் ஏற்றேன்.என்னை நம்பி மட்டுமல்ல, உங்களை நம்பியும்தான் ஏற்றேன். நீங்கள் இருக்கும் தைரியத்தில் தான்! அன்றுமுதல் அனைத்துத் தேர்தல்களிலும் நமக்கு ஏறுமுகம்தான்.

வெற்றிச் செய்தியைத் தவிர நம்செவிகளுக்கு எதுவும் கேட்கவில்லை. இந்த 3 ஆண்டுகாலம் என்பது திமுகவுக்கு முன்னேற்றமான காலம். இரண்டாவது முறையும் உங்களுக்குப் பணியாற்ற கட்டளையிட்டிருக்கிறீர்கள். இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிதலே என் சிந்தனை. கழகத்தில் 15-வது கழகத் தேர்தல் இது. கிளைக்கழகம் தொடங்கி, மாவட்டக் கழகம் வரை அமைப்பு உருவாக்கப்பட்டு லட்சத்துக்கும் அதிகமானோர் கழகப் பொறுப்புக்கு வந்துள்ளனர். மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தலை நடத்தி வருகிறோம். கழகத்தின் பல பதவிகளுக்குப் போட்டி இருந்தது. அது பதவிக்கான போட்டி அல்ல; கட்சிக்கு உழைப்பதற்குத்தான் என்பதில் எனக்கும் சந்தோஷம். சின்னச் சின்ன சலசலப்புகளைத் தவிர அமைதியாகத் தேர்தல் நடந்திருக்கிறது. இதற்குக் காரணமான தலைமைக்கழகத் தேர்தல் ஆணையர்களுக்கு நன்றி. சிறு பிரச்சினை ஏற்பட்டாலும் தலைமைக் கழகத்தில் அவர்களை அழைத்துப் பேசிய நேரு, ஆ.ராசா, தங்கம் தென்னரசு, ஆர்.எஸ்.பாரதி, அன்பகம் கலை ஆகியோருக்கு என் நன்றிகள்.

விட்டுக்கொடுத்தும், தட்டிக்கொடுத்தும் பலர் பொறுப்புக்கு வந்துள்ளனர். தகுதியானவர்களுக்கே பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. போட்டி மட்டுமல்ல, விட்டுக்கொடுப்பதும் ஜனநாயக நடைமுறை என்றார் அண்ணா.

மாவட்டச் செயலாளர்கள் தேர்தலில் மோதல் சலசலப்பு இருக்கும் என எழுதிய சில பாரம்பரிய பத்திரிகைகளின் ஆசையில் மண் விழுந்தது. தேர்தல் சுமூகமாக நடந்தது. திமுகவில் ஜனநாயகம் இல்லை என இப்போது எழுதுகிறார்கள். உங்களைவிட என்னைவிட சில பத்திரிகைகள் திமுக மீது பாசமாக உள்ளனர். மாறி மாறி இதைப் படிப்பவர்கள் தலைசுற்றி விழுவார்கள். ‘கருணாநிதி வாழ்க என்றாலும், வீழ்க என்றாலும் எனக்குப் பெருமைதான்’ என ஒருமுறை அவர் சொன்னார். ‘ஏன் என்றால் கருணாநிதி என்று சொல்கிறார்களே’ என்றார். திமுக பழுத்த மரம் மட்டும் இல்லை. கல் கோட்டை. வீசப்படும் கற்களை வைத்தே கோட்டை கட்டுபவர்கள் நாம்” என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

மேலும், “புது நிர்வாகிகள் பலர் வந்துள்ளீர்கள். பழையவர்களும் இருப்பீர்கள். காலம் உங்களுக்குச் சில பணிகளைச் செய்யக் கொடுத்த கொடைதான் இந்தப் பதவி. நம்மைவிட தகுதியானவர்கள் யாரும் இல்லை என நினைக்க வேண்டாம். நம்மைப்போல் பலர் லட்சம் பேர் காத்திருக்கிறார்கள். அவர்கள் உங்களின் தோளோடு, தோள் நின்று இனமானம் காக்கப் போகிறார்கள். எந்தப் பொறுப்பும் எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தே தொடரும். மறந்துவிடாதீர்கள். பத்து ஆண்டு எதிர்கட்சியாக இருந்தபோது இருந்தவர்களில் சிலர் பொறுப்புக்குத் தொடரட்டும் என விட்டோம். சிலர் இரக்கத்தால் பொறுப்புக்கு நீட்டிப்பு பெற்றுள்ளனர். அதற்காக வாய்ப்பைப் பெற முடியாதவர்கள் வருத்த வேண்டாம். வாய்ப்பு மறுக்கப்படவும் இல்லை. அவர்கள் மறக்கப்படவும் இல்லை. கழகத்தை வலிமைப்படுத்தும் பொறுப்பு அவர்களுக்கு அதிகம்.

பொறுப்புக்கு வந்திருக்கும் அனைவரின் செயலும் தலைமைக் கழகத்தால் கண்காணிக்கப்படும். மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழகம் கூட்டம் எத்தனை நடத்துகிறீர்களோ அதுதான் கட்சியை வலுப்படுத்தும். நீங்களே தொடர்ந்து செயல்பட வேண்டும். அதற்கான மினிட் புத்தகங்களை நானே தொடர்புகொண்டு அறிவாலயத்தில் வைத்து உங்களை அழைத்துப் பார்க்கப்போகிறேன். கழகத்தில் பல அணிகள் இருக்கின்றன. மாவட்ட நிர்வாகிகள் நியமனம் அடுத்து நடக்கும். எத்தனை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என அவர்களையும் கண்காணிப்பேன். மாவட்டக் கழக நிர்வாகிகள் வழிவிட்டு அவர்களையும் வழிநடத்த வேண்டும். பெற்ற வெற்றியைத் தக்கவைக்க வேண்டும். அதுவும் நிரந்தரமாக!

தமிழ்நாட்டில் திமுகதான் இனி நிரந்தரமாக ஆளப்போகிறது என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. மக்கள் மத்தியில் திமுகவின் செல்வாக்கும், என் மீதான நம்பிக்கையும் அதிகரித்துள்ளது. இதைத் தக்கவைக்க வேண்டும் என்பதுதான் என் சிந்தனையாக இருக்கிறது. சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள், ‘பதவியில் துன்பம்தானே தவிர இன்பம் இல்லை’ என்கிறார். பல்முனைத் தாக்குதலுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவன் நான். ஒருபுறம் முதல்வர். மறுபுறம் திமுகவின் தலைவர். மத்தளத்திற்கு இருபக்கமும் அடிபோல அது. இந்நிலையில் என்னை மேலும் துன்பப்படுத்துவது போல் கழக நிர்வாகிகள் நடந்துகொண்டால் நான் என்ன செய்து? உங்கள் செயல்பாடுகள் பெருமைப்படுத்துவதாக இருக்க வேண்டும். சிறுமைப்படுத்தக் கூடாது.

பாத்ரூம், படுக்கையறை தவிர அனைத்தும் பொது இடம் ஆகிவிட்டது. ஒரு சொல் வெல்லும். ஒரு சொல் கொல்லும் என்பார்கள். பொதுமேடைகள் மட்டுமல்ல. அடுத்தவரிடம் பேசும்போதும் எச்சரிக்கை இனி அவசியம். நீங்கள் சொன்னதை ஒட்டியும், வெட்டியும் போட்டுவிடுவார்கள். அதற்குப் பதில் சொல்லவே நேரம் போதாது. நாம் செய்துவரும் சாதனையில் குறை கண்டுபிடிக்க முடியாதவகள் கொச்சைப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டு அதைச் செய்கிறார்கள்.

நிதி நிலை சரியாக இருந்திருந்தால் இன்னும் நூறு திட்டம் தீட்டியிருப்போம். ஒவ்வொரு மனிதனையும் ஏதாவது திட்டம் போய்ச் சேர்ந்திருக்கும். திமுக ஆட்சி மக்களின் ஆட்சியாக நடந்துவருகிறது. திமுக கொள்கையின் முக்கியத்துவத்தையும், பொய், அவதூறைச் சுக்குநூறாக்கவும் இளைஞர் கூட்டத்தை உருவாக்குங்கள். திண்ணைப் பிரச்சாரம் தொடங்கி வாட்ஸ் -அப் உள்ளிட்ட சமூகவலைதளம் மூலம் இளைஞர்களிடம் பிரச்சாரம் செய்யுங்கள். திமுகவை நோக்கி வரும் இளைஞர்களுக்கு கொள்கைப்பாடம் எடுப்பது முக்கியக் கடமையாக இருக்க வேண்டும்.

மக்களவைத் தேர்தல் நெருங்குகிறது. 40 தொகுதிகளைக் கைப்பற்றி அகில இந்திய அளவில் முக்கியம் பெற வேண்டும். பாஜக எந்தக் கீழ்த்தர அரசியலையும் செய்யும். அவர்களிடம் சாதனை எதுவும் இல்லாததால் அவதூறு அரசியலை மதத்தை வைத்து முன்னெடுக்கும். அரசியலையும், ஆன்மிகத்தையும் இணைக்காத தமிழ்நாட்டு மக்களால் பாஜக இங்கே மூச்சு திணறுகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக கலகலத்துப்போய் உள்ளது. நான்கு பிரிவாக சரிந்துகிடக்கிறது. திமுக எதிர்ப்பு தவிர வேறு கொள்கை அதிமுகவிடம் இல்லை. அதனால்தான் அந்த இயக்கம் உணர்ச்சி இல்லாமல் கிடக்கிறது. பாஜக, அதிமுக தேர்தல் களத்தில் பல பொய்களைக் கட்டவிழ்த்துவிடுவார்கள். அவமானப்படுத்தப் பார்ப்பார்கள். நாம் எதிர்கொள்ள வேண்டும். நம் சாதனைகள் தான் புகார்களுக்கு பதில். மக்களவைத் தேர்தல் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை இப்போதே தொடங்குங்கள். அடுத்த இரு மாதத்தில் அவற்றை முழுமையாக முடிக்க வேண்டும்” என்று ஸ்டாலின் கூறினார்.

SCROLL FOR NEXT