அரசியல்

`என் அத்தை ஜெயலலிதா வீட்டில் விரைவில் குடியேறப் போகிறேன்'- தீபா அதிரடி அறிவிப்பு

காமதேனு

சென்னை போயஸ் கார்டனில் உள்ள எனது அத்தை ஜெயலலிதா வீட்டில் விரைவில் குடியேற உள்ளதாக அவரது அண்ணன் மகள் தீபா அதிரடியாக அறிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 913 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகிக்க தனி அதிகாரியை நியமிக்கக்கோரி அ.தி.மு.க நிர்வாகிகள் புகழேந்தி மற்றும் ஜானிகிராமன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள், ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லாததால், இந்திய வாரிசு உரிமைச் சட்டப்படி, தீபா மற்றும் தீபக்கை ஆகியோரை ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகளாக அறிவித்தது. மேலும், ஜெயலலிதாவின் பெயரில் அறக்கட்டளை அமைத்து பொது சேவை செய்ய வேண்டும் என்றும் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல அறிவுறுத்தல்களை நீதிபதிகள் பிறப்பித்தனர். இந்நிலையில், தீபா மற்றும் தீபக் ஆகியோரை ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகள் என குறிப்பிடப்பட்டதை நேரடி வாரிசு என உத்தரவிட்டனர் நீதிபதிகள்.

இந்நிலையில், ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றியது அப்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு. இதை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதில், தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரமில்லை எனவும், வேதா நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பித்த சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வேதா நிலையம் மற்றும் மெரினாவில் உள்ள பீனிக்ஸ் நினைவிடம் என 2 நினைவிடங்கள் எதற்கு? ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கி பிறப்பித்த சட்டம் செல்லாது எனக் கூறி, 3 வாரங்களில் வாரிசுதாரர்களிடம் வேதா இல்லத்தை ஒப்படைக்க சென்னை கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது கடந்த ஆண்டு நவம்பர் 24-ம் தேதி. இதையடுத்து, போயஸ் கார்டன் இல்லம் தீபா, தீபக் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் பின்னர் போயஸ் கார்டன் இல்லத்துக்கு தீபா சென்றார். அதன் பிறகு அவர் செல்லவில்லை. தி.நகரில் உள்ள இல்லத்தில் தனது கணவர் மாதவனுடன் வசித்து வருகிறார் தீபா.

இந்நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் விரைவில் குடியேறப் போவதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அதிரடியாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ள தீபா, "ஜெயலலிதாவுக்கு உதவி செய்த காரணத்திற்காக அவருடைய சொத்துக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. இது சசிகலாவுக்கும் பொருந்தும். மிகப்பெரிய சட்ட போராட்டத்திற்கு பின் போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் தங்கள் வசம் வந்துள்ளது. விரைவில் அங்கு குடியேறப் போகிறேன். வேதா நிலையம் விற்பனைக்கு வரும் என்ற வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம்" என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT