அரசியல்

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: சென்னையில் நடந்த ரெய்டில் கத்தை, கத்தையாக வெளிநாட்டு கரன்சி, லேப்டாப், செல்போன்கள் பறிமுதல்

காமதேனு

பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் வீடுகளில் போலீஸார் இன்று நடத்திய அதிரடி சோதனையில் கத்தை, கத்தையாக வெளிநாட்டு கரன்சி, லேப்டாப், செல்போன்கள், டைரி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்குத் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பு கடந்த 10-ம் தேதி சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 43 இடங்களில் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு போலி பாஸ்போர்ட், சிம்கார்டு, பண பரிவர்த்தனை ஆகிய வழங்கி ஆதரவாக செயல்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய பட்டியலில் சென்னையில் 18 பேர், தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்திருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக கடந்த 10 -ம் தேதி தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பட்டியலில் உள்ள நான்கு பேரின் வீடுகளில் சென்னை போலீஸார் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் இன்று மீண்டும் சென்னை போலீஸார் கொடுங்கையூரை ச்சேர்ந்த முகமது தப்ரீஸ், ஏழு கிணறு பகுதியைச் சேர்ந்த தவ்பிக் அகமது, மண்ணடியைச் சேர்ந்த ஹாரூன் ரஷித், வடக்கு கடற்கரை பகுதியைச் சேர்ந்த முகமது முஸ்தபா ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் முகமது தப்ரீஸ் வீட்டில் இருந்து வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட், செல்போன்கள், லேப்டாப், ஹார்ட் டிஸ்க், டைரிகள், உள்ளிட்ட 38 பொருட்கள் மற்றும் ஆவணங்களைக் கைப்பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே போல் மண்ணடியைச் சேர்ந்த ஹாரூன் ரஷித் வீட்டில் இருந்து 10 செல்போன்கள், 10 லட்சம் பணம், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களைப் பறிமுதல் செய்தனர். இதே போல் அனைவரின் வீட்டிலும் இருந்தும் முக்கிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதே போல் முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆரூன் ரஷித் வீட்டில் இருந்து 4 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய், சீனக்கரன்சி 1600 ரூபாய், தாய்லாந்து கரன்சி 4820 ரூபாய், மியான்மர் கரன்சி 50 ஆயிரம் ரூபாய் மற்றும் மண்ணடிப் பகுதியில் உள்ள அவரது டிரேடிங் கம்பெனியிலிருந்து 10.30 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி சோதனை நடந்த இடத்திலிருந்து மின்னணுப் பொருட்கள், லேப்டாப், கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும். தெரிவித்துள்ளனர்.

மேலும் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வருமான வரித்துறையிடம் ஒப்படைத்துள்ளதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட மின்னனுப்பொருட்களைத் தடயவியல் துறையினருக்கு அனுப்பி ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT