மேயர் அன்பழகன்
மேயர் அன்பழகன்  
அரசியல்

மீடியாக்களை அன்பழகன் அவசரமாய் அழைத்தது ஏன்?

காமதேனு

மேயராக பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை ஒருமுறை கூட மீடியா மக்களைச் சந்திக்காமல் இருந்த திருச்சி திமுக மேயர் அன்பழகன், நேற்று திடீரென அனைத்து மீடியாக்களையும் அன்போடு அழைத்துப் பேசினார். இதன் பின்னணியில் அமளிதுமளியான ஒரு காரணம் இருக்கிறது. மாநகராட்சியின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடம் காலியாகவே இருக்கிறது. அதனால் மாநகராட்சி குறித்த எந்தத் தகவலையும் தெரிந்துகொள்ள முடியாத நிலையே நீடிக்கிறது. இதனால் மாநகராட்சி சம்பந்தப்பட்ட குறைகளைச் சுட்டிக்காட்டி விளக்கம் கேட்க முடியாததால் செய்திகள் தாறுமாறாக வெளியாகின்றன. திருச்சி மாநகராட்சி குறித்து தொடர்ச்சியாக இப்படி எதிர்மறை செய்திகளாகவே வெளியாவது ஆளும் கட்சி தலைமையின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டதாம். இதுவிஷயமாக உள்ளூர் அமைச்சர் கே.என்.நேருவை அழைத்த ஆளும்கட்சி தலைமை, “உங்கள் ஊரிலேயே இப்படி இருக்கலாமா?” என்று அக்கறையோடு சுட்டிக்காட்டியதாம். இதையடுத்து திருச்சி மேயரையும் ஆணையரையும் அழைத்து தனக்கே உரிய பாணியில் டோஸ்விட்டாராம் நேரு. அதனால் தான் அவசர அவசரமாய் மீடியா மக்களைச் சந்தித்தாராம் மேயர். இந்தச் சந்திப்பின் போது மாநகராட்சியின் செயல்பாடுகளையும் கான் ட்ராக்டர்கள் சிலரது குறைபாடுகளையும் எடுத்துச் சொன்ன மேயர் அன்பழகன், “இனிமேல் இப்படி நடக்காது... அடிக்கடி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் தரப்படும்” என்று பக்குவமாய் பேசி பத்திரிகையாளர்களை வழியனுப்பிவைத்தாராம்.

SCROLL FOR NEXT