பொன்முடி
பொன்முடி 
அரசியல்

பொன்முடிக்கு எதிராக பொல்லாப்புக் கட்டும் லட்சுமணன்!

காமதேனு

விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் சி.வி.சண்முகத்தை சமாளிக்க முடியாமல் திமுகவுக்கு வந்தவர் லட்சுமணன். விழுப்புரத்தில் தனக்கென தனிப்பட்ட செல்வாக்கை வைத்திருந்ததால் இவருக்கு சட்டப் பேரவைத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் சீட் கொடுத்தது திமுக தலைமை. வந்த வேகத்தில் இப்படி லட்சுமணன் திமுக தலைமையால் கவனிக்கப்படும் விதத்தை சீனியரான பொன்முடியின் ஆதரவாளர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால், அந்தத் தேர்தலில் அதிமுகவினருடன் சேர்ந்துகொண்டு லட்சுமணனுக்கு எதிராக உள்ளடி வேலைகளில் சிலர் இறங்கினார்கள்.

இந்த விஷயத்தை தயவுதாட்சன்யம் பார்க்காமல் தலைமையின் கவனத்துக்குக் கொண்டு சென்றார் லட்சுமணன். இதனையடுத்து, பொன்முடியை அழைத்துப் பேசவேண்டிய விதமாக பேசிய ஸ்டாலின், “லட்சுமணனை ஜெயிக்கவைக்க வேண்டியது உங்க பொறுப்பு” என சாவியை பொன்முடி கையில் கொடுத்தார். இதன்பிறகே நிலமைகள் மாறி லட்சுமணன் வெற்றிமுகம் கண்டார்.

லட்சுமணன்

இதையெல்லாம் மனதில் வைத்திருக்கும் பொன்முடி முகாம், இப்போது லட்சுமணனுக்கு எதிராக, விக்கிரவாண்டி எம்எல்ஏ-வான நா.புகழேந்தியை கொம்புசீவுகிறார்களாம். அரசு விழாக்களில் லட்சுமணனை பின்னுக்குத் தள்ளி புகழேந்தி புகழ் பாடுகிறதாம் பொன்முடி கோஷ்டி. நடந்து முடிந்த உட்கட்சித் தேர்தலில் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் பதவிக்கு லட்சுமணனும் படைதிரட்டினார். ஆனால், பொன்முடி தரப்பில் சிட்டிங் செயலாளரான நா.புகழேந்தியை முன்னிலைப்படுத்தி ஆதரவு திரட்டியது. இவர்களை மீறி எதுவும் செய்யமுடியாது என்பதால் நாசூக்காக போட்டியிலிருந்து விலகிக் கொண்டார் லட்சுமணன். பொன்முடி வகையறாக்களால் தொடர்ந்து இருட்டடிப்புக்கு ஆளாகிவரும் லட்சுமணன், வாய்ப்புக் கிடைத்தல் ஸ்டாலினிடன் தனது மனக் குமுறலைக் கொட்டித் தீர்க்கக் காத்துக்கொண்டிருக்கிறாராம்.

SCROLL FOR NEXT