கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
கே.எஸ்.ராதாகிருஷ்ணன் 
அரசியல்

திமுக தலைமைக்கு நன்றி சொல்லும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்!

காமதேனு

வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனை திமுக செய்தி தொடர்பு செயலாளர் பொறுப்பில் வைத்திருந்தாலும் அவரை திமுக தலைகள் யாரும் கண்டுகொள்ளவில்லையாம். சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் வாய்ப்பை எதிர்பார்த்திருந்த அவருக்கு அந்த வாய்ப்பையும் வழங்கவில்லையாம். இருந்த போதும் தனது அனுபவத்தையும் ஆற்றலையும் கட்சி பயன்படுத்த தவறுகிறதே என்று ஆதங்கப்பட்டவர் மூன்றாண்டுகளுக்கும் மேலாக அறிவாலயத்துப் பக்கம் போகாமலும் ஸ்டாலினைச் சந்திக்காமலும் இருந்தாராம். அப்படியும் அவரைப் பற்றி விசாரிக்க ஆளில்லையாம். இதனால், அரசியலே வேண்டாம் என்று வெறுத்துப்போயிருந்த ராதாகிருஷ்ணன், தனது மனதில் பட்டதை துணிச்சலாக எழுதியும் பேசியும் வந்தார்.

கடைசியாக, காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்து அவர் எழுதிய கட்டுரை தான் அவரை கட்சியைவிட்டு நீக்கக் காரணம் என்கிறார்கள். ஆனால், “அது உண்மையல்ல... திமுக தலைமை அவரை கட்டம்கட்ட சமயம் பார்த்துக்கொண்டிருந்தது. இதைச் சாக்காக வைத்து தூக்கிவிட்டார்கள்” என்று சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். திமுகவுக்கு வந்துவிட்டாலும் மதிமுகவின் செயல்பாடுகளையும் துரை வைகோ அங்கே முன்னிலைப் படுத்தப்படுவதையும் கடுமையாக விமர்சித்து வந்தாராம் ராதாகிருஷ்ணன். இது தொடர்பாகவும் திமுக தலைமைக்கு வருத்தங்கள் போனதாம்.

அனைத்துக்கும் பரிகாரமாகவே ராதாகிருஷ்ணனை கட்சியைவிட்டு நீக்கி இருக்கிறது திமுக தலைமை. இதற்காக வருத்தப்படாத ராதாகிருஷ்ணன், “நானே இதை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தேன். ஏனென்றால், இப்போதுள்ள அரசியல் எனக்கு அறவே பிடிக்கவில்லை. அதனால் சங்கடத்துடன் தான் அங்கே இருந்தேன். அந்த சங்கடத்திலிருந்து எனக்கு இப்போது விடுதலை கொடுத்ததற்காக திமுக தலைமைக்கு நன்றி சொல்ல வேண்டும்” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் உற்சாகம் குறையாமல் பேசிவருகிறாராம்.

SCROLL FOR NEXT