கிருஷ்ணகுமார்
கிருஷ்ணகுமார் 
அரசியல்

திரிசங்கு நிலையில் சுரேஷ்ராஜனின் வலதுகரம்!

காமதேனு

அதிமுக ஆட்சியில் ஒன்றிய செயலாளர், முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்தின் உதவியாளர் என பந்தாகாட்டியவர் கிருஷ்ணகுமார். அப்படி அதிகாரம் செலுத்தியவர் தளவாய் சுந்தரத்துடன் முட்டிக்கொண்டார். ஆனாலும் ஆட்சி இருக்கும் வரை அதிகாரத்தைச் சுவைத்தவர், ஆட்சி மாறியதும் அப்படியே திமுகவில் செட்டிலானார். வந்த இடத்தில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனின் வலதுகரமாக ஒட்டிக்கொண்டார். ஆனால், ஐயா ராசியோ என்னவோ சுரேஷ்ராஜனுக்கு மாவட்டச் செயலாளர் பதவி பறிபோய் செல்லாக்காசானார்.

இதனால் கிருஷ்ணகுமாரும் நிலைகுலைந்தார். சுரேஷ்ராஜனுக்குப் பதிலாக மாவட்டச் செயலாளராக வந்த மகேஷ், அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோருடன் கிருஷ்ணகுமாருக்கு சுமுக உறவு இல்லை. இதன் எதிரொலியாக, கீனாமூனா நடத்திவந்த மருத்துவமனை கேண்டீனில் அதிரடி ஆய்வு நடத்தப்பட்டு தரமில்லாத உணவுகள் விற்பதாக சர்ச்சை கிளப்பப்பட்டது.

இதனையடுத்து, அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தன்னை பழிவாங்குவதாக நீதிமன்றத்தை நாடினார் கிருஷ்ணகுமார். தன்னைச் சுற்றி நடக்கும் இந்த சமாச்சாரங்களை எல்லாம் பார்த்துவிட்டு, “இதுக்குப் பேசாமல் அதிமுகவிலேயே இருந்திருக்கலாம்” என்று புலம்பித் தவிக்கிறாராம் கிருஷ்ணகுமார். எதுக்கு இன்னும் யோசிச்சுக்கிட்டு... பேசாம மறுபடி அதிமுகவுக்குப் போயிடவேண்டியதுதானே என்று கேட்டால், “அங்கே இப்போது பவர் சென்டராக இருப்பவர்கள் இவரை உள்ளேவிட்டால் தானே” என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்!

SCROLL FOR NEXT