அரசியல்

முள்ளை முள்ளால் எடுக்கும் மனோ தங்கராஜ்!

காமதேனு

கன்னியாகுமரியில் அமைச்சர் மனோ தங்கராஜுக்கு எதிராக பட்டவர்த்தனமாகவே மத அரசியல் செய்து வருகிறது பாஜக. குமாரகோயில் முருகன் கோயில் தேரோட்டத்தின் போது, மனோ தங்கராஜ் வடம் பிடித்தபோது, ‘மாற்று மதத்தினர் வடம் பிடிப்பதா?’ என வாதம் செய்தது பாஜக.

இதேபோல், தனது சொந்தத் தொகுதிக்குட்பட்ட திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் 425 ஆண்டுகளுக்குப் பின்பு கும்பாபிஷேகம் நடக்கவும் காரணமாக இருந்தார் மனோ. ஆனாலும் மாற்று மதத்தைச் சேர்ந்த மனோ தங்கராஜ் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொள்ளக் கூடாது என நீதிமன்றப் படியேறியது இந்து முன்னணி. அதற்காக நீதிமன்றத்தில் குட்டும் வாங்கியது இந்து முன்னணி.

இப்படி தனக்கு எதிராக மத வலை பின்னப்படுவதை உள்வாங்கிய மனோ தங்கராஜ், முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்ற திட்டத்துடன் இப்போது தானும் ஒரு இந்து அபிமானியாகவே மாறிவிட்டார். குமரி மாவட்டத்தில் நூறு ஆண்டுகள் பழமையான 115 கோயில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்த அரசு தரப்பில் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வைத்திருக்கிறார் மனோ. மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகவே இந்தப் பணிகளை எல்லாம் முடித்து குடமுழுக்கு விழாவை நடத்த அறிவுறுத்தி இருக்கிறாராம் மனோ. அவரது திட்டப்படி அனைத்துக் கோயில்களுக்கும் குடமுழுக்க விழா நடந்து முடிந்துவிட்டால் பாஜகவினரின் மனோவுக்கு எதிரான மாற்று மதத்தினர் பிரச்சாரம் அறவே மழுங்கிப் போய்விடும். இதுதான் மனோ தங்கராஜின் மாஸ்டர் பிளானாம்.

SCROLL FOR NEXT