அரசியல்

வெளியானது பட்டியல்... வேதனையில் அண்ணாமலை!

காமதேனு

பாஜக மாவட்ட தலைவர்கள் 42 பேரை மாற்றுவதற்கு அண்ணாமலை பரிந்துரைக் கடிதம் கொடுத்திருப்பதாக நாம் ஏற்கெனவே சொல்லி இருந்தோம். அதன்படியே இரண்டு தினங்களுக்கு முன்னதாக பட்டியல் வெளியாகி இருக்கிறது. ஆனால், அந்தப் பட்டியல் அண்ணாமலை சிபாரிசு செய்த பட்டியல் இல்லையாம்.

தமிழக பாஜகவில் அமைப்புப் பொதுச்செயலாளரும் ஆர்எஸ்எஸ் காரருமான கேசவவிநாயகனுக்கும் அண்ணாமலைக்கும் ஆரம்பத்திலிருந்தே ஒத்துப்போகவில்லை. அண்ணாமலை ஒரு முடிவெடுத்தால் அதற்கு நேர்மாறாக முடிவெடுக்கிறாராம் விநாயகன். இந்த நிலையில், இப்போது 7 மாவட்டங்களுக்கு புதிய தலைவர்களையும் பிரிக்கப்பட்ட 14 கட்சி மாவட்டங்களுக்கான தலைவர்களையும் அறிவித்திருக்கிறார்கள்.

ஏற்கெனவே, வில்லங்கப் புகாரில் சிக்கியவர்கள் உள்பட 8 மாவட்ட தலைவர்களை அண்ணாமலை அதிரடியாய் பதவியைவிட்டு நீக்கி இருந்தார். இவர்களில் பெரும்பாலான வர்கள் கேசவவிநாயகனின் ஆதரவாளர்களாம். இந்த நிலையில், இப்போது அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலில் ஏற்கெனவே அண்ணாமலையால் நீக்கப்பட்டவர்களும் தலைவர்களாகி இருக்கிறார்களாம். இதனால் கடும் அப்செட்டில் இருக்கும் அண்ணாமலை, “கட்சியை சீர்படுத்தணும்னு நினைக்கிறோம். ஆனால், உள்ளுக்குள் இருப்பவர்களே அதற்கு தடையாக இருக்கிறார்கள். இதையெல்லாம் சகித்துக் கொண்டு இதற்கு மேலும் தலைவர் பதவியில் இருக்கணுமான்னு நினைக்கிறேன்” என்று தனக்கு நெருக்கமான பாஜக தலைவர்களிடம் நொந்துபோய்ப் பேசினாராம்.

இதனிடையே, ஆறு வருடங்களுக்கு மேலாக அமைப்புப் பொதுச்செயலாளராக இருக்கும் கேசவவிநாயகனை அந்தப் பொறுப்பிலிருந்து மாற்ற வேண்டும் என தமிழக பாஜகவில் சிலர் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்களாம்.

SCROLL FOR NEXT