அரசியல்

கே.எஸ்.அழகிரி மீது தொடர்ந்து பாய்ந்து வரும் வழக்கு: போராட்டத்தால் போலீஸ் நடவடிக்கை

காமதேனு

ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட 277 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நேஷ்னல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருவதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று தென்சென்னை மாவட்ட செயலாளர் (மேற்கு) முத்தழகு தலைமையில் ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில்

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், தொண்டர்கள், உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். போராட்டத்திற்கு போலீஸார் அனுமதி மறுத்த நிலையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதனால், இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் திடீரென சாலை மறியல் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது. இதனையடுத்து, போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

இதனை தொடர்ந்து கிண்டி போலீஸார் அனுமதியின்றி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, எம்.எல்.ஏ செல்வபெருந்தகை, முன்னாள் தலைவர் தங்கபாலு, முத்தழகு, துரைசந்திரன், ரூபி மனோகரன், ராமசந்திரன் உட்பட 277 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

அண்மையில் மத்திய அரசை கண்டித்து சென்னை சாஸ்திரி பவன் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்ற கே.எஸ்.அழகிரி உள்பட நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

SCROLL FOR NEXT