அரசியல்

`தமிழ் மொழியை எங்கெல்லாம் பரப்ப முடியுமோ அங்கெல்லாம் பரப்ப வேண்டும்'–ஆளுநர் ஆர்.என்.ரவி!

காமதேனு

“தமிழ் மொழியை எங்கெல்லாம் பரப்ப முடியுமோ அங்கெல்லாம் பரப்ப வேண்டும்“ என சென்னைப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார்

சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழா இன்று காலை நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மாநில உரிமையிலேயே கல்வி இருக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியின் நிறைவாகப் பேசிய ஆளுநர் ரவி, “சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் வளர்ச்சிக்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள் என்பது குறித்துப் பெருமையடைகிறேன். தமிழ் கலாச்சாரம், தமிழ் இலக்கியம் போன்றவை தமிழுக்குப் பெருமை சேர்ப்பதாக உள்ளது. உலகத்தில் பேசப்படும் மொழிகளில், மிகவும் தொன்மையானது எனத் தமிழ்மொழி குறித்து அடிக்கடி பிரதமர் மோடி பேசுவார். தமிழ் மொழியை எங்கெல்லாம் பரப்ப முடியுமோ அங்கெல்லாம் பரப்ப வேண்டும். உயர் நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழியைப் பயன்படுத்த வேண்டும் எனப் பிரதமர் கூறியிருக்கிறார். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகத் தமிழைக் கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் உள்ள சட்ட பல்கலைக் கழகம், அதன் கல்லூரிகளில் தமிழ் மொழியில் சட்டம் பயில நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.

தமிழ் மிகவும் தொன்மையான மொழி. அதன் பாரம்பரியம் என்னை நெகிழ்ச்சியடைச் செய்கிறது. தமிழ் மொழி இல்லாத மாநிலங்களில் தமிழ் மொழியை மூன்றாவது மொழியாகப் பயில நாங்கள் பரிந்துரை செய்கிறோம். தமிழ்நாட்டைத் தாண்டி பிற மாநில பல்கலைக் கழகங்களிலும் தமிழ் இருக்கைகளை ஏற்படுத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் நூறு ஆண்டுகளுக்குள் இந்தியா உலக அளவில் ஆதிக்கம் செலுத்தும் நாடாக வலுப்பெறும். அதற்கு தமிழ்நாடு முழுமையாகப் பங்காற்ற வேண்டும்” என்றார்

SCROLL FOR NEXT