அரசியல்

`மதவாத, இனவாத, தீவிரவாத சக்திகளை ஒருபோதும் அரசு வளரவிடாது'- முதல்வர் ஸ்டாலின் உறுதி

காமதேனு

``தமிழ்நாட்டில் மதவாத, இனவாத, தீவிரவாத சக்திகளை ஒருபோதும் இந்த அரசு வளரவிடாது" என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் சட்டப்பேரவையில் பதிலுரை அளித்த முதல்வர் ஸ்டாலின், தமிழக அரசின் சாதனை குறித்துப் பேசினார். மேலும், "உண்மையான பக்தர்கள் அரசின் சாதனையை போற்றிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் கபட வேடதாரிகள் அரசுக்கு நல்ல பெயர் கிடைப்பதை பொறுத்துக் கொள்ள இயலாமல் தூற்றிக் கொண்டு இருக்கிறார்கள். இப்படி சாதனைகள் செய்வது சிலருக்கு பிடிக்கவில்லை. அனைத்து கோயில்களும் பொழிவு பெறுவது சிலருக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் அரசு மீது அவதூறு செய்து கொண்டிருக்கிறார்கள். சட்டம், ஒழுங்கு குறித்து இந்த மாமன்றத்தில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. குற்றச்சாட்டுகள் சொல்வதாக இருந்தால் அதை ஆதாரத்துடன் சொல்ல வேண்டும். பொத்தாம் பொதுவாக சொல்லக்கூடாது.

மதக் கலவரங்கள் நடந்துள்ளதா சொல்லுங்கள். பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதா. அப்பாவிகளின் உயிர் பறிபோனதா. நெஞ்சை உலுக்கக் கூடிய பொள்ளாச்சி சம்பவமும், மர்மத்தின் உச்சமாய் விளங்கிக் கொண்டிருக்கின்ற கோடநாடு கொலைகளும் கொலைகளும் யாருடைய ஆட்சி காலத்தில் நடந்தது என்பதை மக்களும் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏதாவது நடந்த குற்ற சம்பவங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லையா சொல்லுங்கள். காவல்துறை கடமையை சிறப்பாக செய்து வருகிறது. அதை சொல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்ட குற்றங்களை பேசுவதால் என்ன பயன்? மாநிலத்தில் சட்டம், ஒழுங்கை திறம்பட நிலைநாட்டிட இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

அரசின் சீரிய நடவடிக்கைகளினால் தமிழ்நாடு தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழ்ந்து வருகிறது. அதன் காரணமாக பல்வேறு நாடுகளில் இருந்தும் தொழில் முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டை தேடி வந்து இங்கு முதலீடு செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மதவாத இனவாத தீவிரவாத சக்திகளை ஒருபோதும் இந்த அரசு வளரவிடாது. எந்த ஒரு வன்முறை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து திகழும்" என்றார்.

SCROLL FOR NEXT