அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ் 
அரசியல்

‘நீர் மேலாண்மைக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்!’ - அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

காமதேனு

பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் சென்னை பெசன்ட் நகரில் இன்று காலை நடைபெற்றது. இதை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடக்கி வைத்தார்.

தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது, ”இந்தத் தலைமுறை நடவடிக்கை எடுத்தால்தான் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும். தமிழக அரசு பருவநிலை மாற்றங்கள் சம்பந்தமான பிரச்சினையை உடனே கையில் எடுக்க வேண்டும். பருவநிலை அவசரநிலை பிரகடனத்தை உடனடியாகச் செய்ய வேண்டும் என்பதும் இந்த மாரத்தானின் நோக்கம்.

உலக அளவில் ஆண்டுதோறும் வெப்பம் அதிகரித்து வருகிறது. ஒருபகுதியில் வெள்ளமும், இன்னொரு பகுதியில் வறட்சியும் இருக்கிறது. அதை அரசு கவனிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதை நடத்துகிறோம். அனைத்துத் தரப்பினருக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது. அந்த உணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம். அனைவரும் சேர்ந்து உழைத்தால்தான் உலகைக் காக்க முடியும்.

150 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் வெப்பநிலை 14 டிகிரி சென்டிகிரேடாக இருந்தது. அது இன்று 15.2 சென்டிகிரேடாக உயர்ந்துள்ளது. அதைக்கட்டுப்படுத்த பொதுப் போக்குவரத்து ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பது முதல், அதிக மரங்களை நட வேண்டும் என்பதுவரை பசுமைத் தாயகம் அமைப்பு ஏராளமான திட்டங்களை வைத்துள்ளது. நீர் மேலாண்மைக்கு மட்டும் தமிழக அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும். இப்போது ஒதுக்கப்படும் நிதி போதுமானதாக இல்லை. புதிய ஏரிகள் உருவாக்க வேண்டும். அனைத்து நீர்நிலைகளையும் தூர்வார வேண்டும்” என்றார்.

இந்த விழிப்புணர்வு மாரத்தானில் இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் சித்தார்த் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மாரத்தானில் கலந்துகொண்டவர்கள் தங்கள் கைகளில் வேண்டும் பருவநிலை அவசரநிலைப் பிரகடனம் என்னும் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வூட்டினர்.

SCROLL FOR NEXT