மம்தா பானர்ஜி 
அரசியல்

வாரம் ஒருமுறை கோழிக்கறியுடன் பழங்கள்: அசத்தும் மேற்கு வங்க மதிய உணவுத்திட்டம்

காமதேனு

மேற்கு வங்க மாநிலத்தில் மதிய உணவுத்திட்டத்தில் பழங்கள் மற்றும் கோழிக்கறி வழங்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானார்ஜி தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் கல்வி பயிலும் பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தில் பழங்கள் மற்றும் கோழிக்கறி வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் ஜனவரி முதல் ஏப்ரல் வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், " பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தில் ஏற்கெனவே அரிசி சோறு, பருப்பு, உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறி, சோயா பீன்ஸ், முட்டை ஆகிவை வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் வாரம் ஒரு முறை கோழிக்கறியும், அந்த பருவத்தில் கிடைக்கும் பழ வகைகளையும் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 317 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு தொடருமா என்பது குறித்து இதுவரை அரசு முடிவெடுக்கவில்லை" என்றார்.

மேற்கு வங்க பள்ளிகளில் மாணவர்களுக்கு வாரம் ஒரு முறை கோழிக்கறி, பழங்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். ஆனால், இந்த ஆண்டு மேற்கு வங்கத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது எதிர்கட்சியினரிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT