உதயநிதி ஸ்டாலினுடன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 
அரசியல்

நண்பேன்டா... உதயநிதி, மகேஷ் பொய்யாமொழி... ஒருவருக்கொருவர் உயர்த்திய உயிர் நண்பர்கள்!

கரு.முத்து

தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  உதயநிதி ஸ்டாலின் என இருவருமே தங்களது தந்தை பெயரை பின்னோட்டாக தாங்கியவர்கள் தான். அவர்கள் பெயர்களுக்கு பின்னால் இருக்கும் இரண்டு தந்தைகளுமே இவர்களை விட இன்னும் நெருக்கமான நண்பர்களாக இருந்தவர்கள். 

முதல்வர் ஸ்டாலினும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பொய்யாமொழியும் அவ்வளவு ஆத்மார்த்தமான நண்பர்கள்.

தங்களின் தந்தை வழி பழக்கத்தால் இளைஞர் பருவத்தில் இருந்து இருவரும் இணையற்ற நண்பர்களாக இருந்து வந்தனர். இருவரின் குடும்பமும் நட்பாக பழகியது. இரண்டு குடும்பத்து பிள்ளைகளும் ஒன்றாக கலந்து பழகினார்கள். அதில் தான் மகேஷுக்கும் உதயநிதிக்கும் நெருக்கம் ஏற்பட்டது. 

அந்த நெருக்கத்தின் விளைவாக இருவரும் தங்களையும் நிலைநிறுத்திக் கொண்டு தங்கள் நண்பரையும் உயர்த்தும் வகையில் தீவிர முனைப்பு காட்டி செயல்பட்டு வருகின்றனர். தனது நண்பன் மகேஷுக்கு 2016 ல் சட்டமன்றத் தேர்தலில் சீட்டு வாங்கிக்கொடுத்தார் உதயநிதி. அவருக்கு இளைஞரணி செயலாளர்  பொறுப்பு கிடைக்கவும் உதயநிதி காரணமாக இருந்தார்.

2021 ல் மீண்டும் திருவெறும்பூரில் சீட்டு கொடுத்து அதில் வெற்றி பெற்றதும் திருச்சி மாவட்டத்தில் மிகப்பெரிய ஆதிக்கமாக இருக்கக்கூடிய நேருவுக்கு இணையாக அமைச்சர் பதவி வாங்கிக் கொடுத்தார். அது மட்டுமில்லாமல் மகேஷுக்கு மாவட்ட செயலாளர் பதவியும் கை கூடியது.  இப்படி தனது நண்பனை  அடுத்தடுத்து உயர்நிலைக்கு கொண்டு வர உதவியாக இருந்தவர் உதயநிதி.

ஒரு பக்கம் உதயநிதி தனக்கு உதவிக்கொண்டு இருக்கும் நிலையில், உதயநிதி கட்சியிலும் ஆட்சியிலும் எந்த இடத்திற்கு வர வேண்டும் என்று உதயநிதியின் குடும்பம் நினைத்ததோ அதை செயல்படுத்திட பெரிதும் உதவியாக இருந்தார் மகேஷ் பொய்யாமொழி.

அமைச்சராக  வலம் வந்த மகேஷ், அந்த அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு அப்படியே  வாளாவிருந்து விடவில்லை. பள்ளிக் கல்வித்துறைக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை  உதயநிதியின் வளர்ச்சிக்கும் தற்போது வரை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, எம்எல்ஏவாக வலம் வந்து கொண்டிருந்த உதயநிதியின் மக்கள் சேவை திருவல்லிக்கேணி தொகுதிக்கு மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுமைக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஆவலை வெளியிட்டு முதலில் திரியை கொளுத்தியது அன்பில் மகேஷ் பொய்யாமொழி தான். அதன் பின்னர் அடுத்தடுத்து சில அமைச்சர்களும் இந்த கருத்தை தெரிவிக்க, தொடர்ந்து உதயநிதியை அமைச்சராக வேண்டும் என்று அனைவரும் வேண்டுகோள் விடுக்க ஆரம்பித்தார்கள்.  உதயநிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இதேபோல முன்பு உதயநிதியை கட்சிக்குள் முக்கிய இடத்துக்கு  கொண்டு வர வேண்டும் என்று உதயநிதி குடும்பம் நினைத்தபோது இளைஞர் அணி செயலாளராக ஆக்க வேண்டும் என்று ஒவ்வொரு மாவட்டமாக சென்று,மாவட்ட செயலாளர்களை கேட்டுக்கொண்டு தீர்மானம் போட வைத்தது அவர்தான்.  அதன் விளைவாக அனைத்து மாவட்டங்களிலும் இளைஞர் அணி செயலாளராக உதயநிதியை நியமிக்க வேண்டும் என்று தீர்மானம் போடப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக ஆக்கப்பட்டார்.

பள்ளிக்கல்வித் துறையில் பல சங்கடங்கள் இருந்த போதிலும் சிக்கலுக்கு ஆகாத அமைச்சராக அன்பில் மகேஷ் தொடர்வதும் ஒவ்வொரு படிநிலைகளாக உதயநிதி உயர்த்தப்படுவதும் இவர்கள் இருவரும் ஒருவர்பால் ஒருவர்  வைத்திருக்கும்  அதிக அக்கறையும் அன்பும் தான் காரணம்.  அதிகாரம் வந்த போதிலும் தங்கள் நட்பை சிறிதும் பாதிக்காத வகையில் போற்றுவதில் இவர்கள் சிறந்த நண்பேன்டா ஆகத் தான் திகழ்கிறார்கள். 

அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் அடுத்த ஆசை,  உதயநிதி ஸ்டாலின் வருங்கால முதல்வராக ஆக வேண்டும் என்பதாகத் தான் இருக்கும் என்பதை தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

SCROLL FOR NEXT