எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி 
அரசியல்

பொங்கலுக்கு வேட்டி சேலை கொடுத்திருந்தால் வாணியம்பாடியில் 4 பேர் உயிரிழந்திருக்க மாட்டார்கள்: ஈபிஎஸ் கண்டனம்

காமதேனு

தமிழகத்தில் வழக்கம்போல் பொங்கலுக்கு வேட்டி சேலை வழங்கி இருந்தால் சேலை வாங்க கூட்டநெரிசலில் சிக்கி நான்கு முதிர்ந்த பெண்கள் உயிரிழந்திருக்கும் சம்பவம் நடந்திருக்காது என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள வாரச்சந்தையில் ஒரு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மைதானத்தில் திடீரென ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் குவிந்தனர். தைப்பூசத்தை ஒட்டி அந்த பகுதி மக்களுக்கு இலவசமாக வேட்டி, சேலை வழங்குவதற்கான டோக்கனை தொழிலதிபர் ஐயப்பன் என்பவர் கொடுத்து இருக்கிறார். அப்போது, கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதில் நெரிசலில் சிக்கி 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10க்கு மேற்பட்டவர்கள் மயங்கி கீழே விழுந்தனர்.

நிகழ்வுக்கு ஏற்பாடு செய்து இருந்த ஐயப்பனின் நிறுவனத்தை சேர்ந்த 15 பேர் மட்டுமே கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் இருந்தனர். கூட்ட நெரிசலில் அவர்களும் ஓடியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வாணியம்பாடி போலீஸார், நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்து இருந்த தொழிலதிபர் ஐயப்பனை நேற்று இரவு கைது செய்தனர். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த நான்கு பெண்களுக்கும் தலா 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த ஆண்டு தைப்பொங்கலுக்கு அரசின் விலையில்லா வேட்டி, சேலையை வழங்கியிருந்தால் தனியார் வழங்கும் இலவச சேலையை வாங்க ஒரேநேரத்தில் 1500 பேர் குவிந்திருக்கமாட்டார்கள். கூட்டநெரிசலில் அப்பாவிகள் உயிரிழந்திருக்கவும் மாட்டார்கள். நிர்வாகத்திறன் அற்ற இந்த அரசின் விலையில்லாத வேட்டி, சேலை திட்டத்தின் காலதாமதத்தால் நடந்த இந்தச் சம்பவத்திற்கு திமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு அறிவித்த நிவாரணத்தை பத்து லட்சமாகவும், காயம் அடைந்தோருக்கு ஒரு லட்சமும் வழங்க வேண்டும்.”எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

SCROLL FOR NEXT