அரசியல்

பாஜகவில் அடுத்த வாரம் இணைகிறார் பஞ்சாப் முன்னாள் முதல்வர்!

காமதேனு

பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் அடுத்த வாரம் பாஜகவில் இணையவுள்ளார்.

கடந்த ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸை தொடங்கிய அமரீந்தர் சிங், அடுத்தவாரம் டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாஜகவுடன் தனது கட்சியை இணைக்கவுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கிற்கு நெருக்கமான வட்டாரங்கள் இரு கட்சிகளின் இணைப்பு செப்டம்பர் 19 ம் தேதி நடைபெறும் என தெரிவித்தது. ஆனால், இணைப்பு தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், அமரீந்தர் சிங் பாஜகவில் இணைவது உறுதியாகி உள்ளது என்றும் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை அம்ரீந்தர் சிங் சந்தித்தார். 80 வயதான கேப்டன் அமரீந்தர் சிங், செப்டம்பர் 18 ம் தேதி டெல்லிக்கு புறப்படுகிறார். அவரது கட்சி பாஜகவில் இணைந்த பிறகு அம்ரீந்தருக்கு முக்கிய பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளது.

பிரதமர் மோடியுடன் கேப்டன் அமரீந்தர் சிங்

கேப்டன் அமரீந்தர் சிங் 2002-07 மற்றும் 2017-21 என இரண்டு முறை காங்கிரஸ் சார்பில் பஞ்சாப் முதல்வராக இருந்தார். அமரீந்தர் சிங் கடந்த செப்டம்பரில் பஞ்சாப் முதலமைச்சர் பதவியைவிட்டு விலகிய பின்னர் காங்கிரஸிலிருந்து வெளியேறி பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார். கடந்த சட்டமன்ற தேர்தலில் பி.எல்.சி., பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டது, ஆனால் இக்கூட்டணி படுதோல்வியடைந்தது.

பஞ்சாபில் நோட்டாவை விட குறைவான வாக்குகளே பிஎல்சி கட்சி பெற்றது. 1,10,308 நோட்டா வாக்குகள் பதிவான நிலையில், பிஎல்சி கட்சி அதன் சின்னத்தில் 84,697 வாக்குகளை மட்டுமே பெற்றது. பிஎல்சியின் ஐந்து வேட்பாளர்கள் பாஜக சின்னத்தில் போட்டியிட்டனர்.

SCROLL FOR NEXT