அரசியல்

மண்டலத் தலைவர் பதவிக்கு மதுரை திமுகவில் மல்லுக்கட்டு!

கவிதா குமார்

மதுரை மாநகராட்சியில் 5 மண்டலத் தலைவர்கள் பதவியைப் பிடிக்க திமுகவில் கடும் போட்டி நிலவுகிறது. அதேபோல அதிமுகவில் எதிர்க்கட்சி தலைவர் பதவியைப் பிடிக்க இருவர் கட்சி தலைமைக்கு நெருக்கடி தந்து வருகின்றனர்.

மதுரை மாநகராட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளரான இந்திராணி மேயராக நியமிக்கப்பட்டார். துணை மேயராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாகராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேயர், துணை மேயர் பதவிக்கு குறிவைத்து தோன்றுப் போன திமுக நிர்வாகிகள் தற்போது மண்டலத் தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் பதவிகளைப் பிடிக்க கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மண்டலத் தலைவர்கள், நிலைக்குழு தலைவர்களுக்கான மறைமுகத்தேர்தல் மார்ச் 30-ம் தேதி நடைபெறுகிறது. இப்பதவிகளை தங்கள் ஆதரவாளர்களுக்கு பெற்றுத்தர அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி, முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், மற்றும் தளபதி, மணிமாறன் ஆகியோரிடையே போட்டி நிலவி வருகிறது.

இதையொட்டி திமுக சார்பில் நேற்று முன்தினம் மதுரையில் நடந்த ஆலோசனை கூட்டம் ஒருமித்த கருத்து ஏற்படாமல் பாதியிலேயே முடிந்துள்ளது. அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறியுள்ளார். இதன் பின் நடந்த கூட்டமும் அமைதியாக நடக்கவில்லை. பொன்.முத்துராமலிங்கத்திற்கும், தளபதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அமைச்சர் பி.மூர்த்தி அவர்களை சமாதானப்படுத்தியுள்ளார். ஆனாலும், கூட்டத்தில் இருந்து தளபதி வெளியேறியுள்ளார். இதனால் மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவர்கள், நிலைக்குழுத் தலைவர்கள் பதவிகளை யாருக்கு ஒதுக்குவது என்று முடிவு எடுக்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக மதுரை மாவட்ட நிர்வாகிகளிடம் கேட்ட போது, "மேயர், துணைமேயர் பதவிகளைப் பிடிக்க திமுகவில் பலர் கடும் முயற்சி செய்தனர். ஆனால், அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தீவிர முயற்சியால் இந்திராணிக்கு மேயர் பதவியும், கூட்டணி கட்சியைச் சேர்ந்த நாகராஜனுக்கு துணைமேயர் பதவியும் கிடைத்தன. தற்போது மண்டலத் தலைவர்கள் பதவிகளையும் தன் ஆதரவாளர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதால் தான் இந்த பிரச்சினையே ஏற்பட்டது. வாசுகி, ரோகிணி, விஜயமெளசுமி, ஜெயராம், எஸ்ஸார் கோபி உள்பட பலர் மண்டலத் தலைவர்களுக்கான போட்டியில் உள்ளனர். இதற்கான பட்டியலை திமுக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்களிடம் கட்சி தலைமை கேட்டுள்ளது. ஆனால், மேயர் பதவியில் அதிகாரம் செலுத்தியது போலவே, மண்டலத் தலைவர் பதவியிலும் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தலையிட்டதால் தான் பாதியிலேயே கூட்டம் முடிந்துவிட்டது" என்று கூறினர்.

இதேபோல, அதிமுகவில் எதிர்க்கட்சி தலைவர் பதவியைப் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. மதுரை மாநகராட்சியில் நீண்ட கால உறுப்பினராக உள்ள சண்முகவள்ளி தன்னை மாமன்ற எதிர்க்கட்சி தலைவராக அறிவிக்க வேண்டும் என்று கட்சி தலைமையிடம் வலியுறுத்துவதாக அதிமுகவினர் கூறுகின்றனர். ஆனால், திமுகவினர் அதிகம் உள்ள சபையை சண்முகவள்ளியால் எதிர்கொள்ள முடியாது. எனவே, சோலைராஜாவை எதிர்க்கட்சி தலைவராக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் தலைமையை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கும் மண்டலத் தலைவர் பதவி வழங்க வேண்டும் மதுரை நகர் கமிட்டி தலைவர் கார்த்திகேயன் சென்னையிலேயே டேரா போட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர். பதவிகளைப் பிடிக்க நடக்கும் போட்டா, போட்டிகளால் மதுரை அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.

SCROLL FOR NEXT