மகேஷ்
மகேஷ் 
அரசியல்

முதியவரை மிரட்டி மாமூல் வசூல்: சென்னையில் இந்து மக்கள் கட்சி தலைவர் கைது

காமதேனு

கோயில் இடத்தில் வாடகைக்கு குடியிருந்து வரும் முதியவரை மிரட்டி மாமூல் வசூலித்த இந்து மக்கள் கட்சி சென்னை மாவட்ட துணைத் தலைவர் போலீஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணி டாக்டர் நடேசன் சாலையில் தீர்த்தபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் கோயில் இடத்தில் வாடகைக்கு குடியிருக்கும் மக்களிடம் இந்து மக்கள் கட்சி சென்னை மாவட்ட துணைத் தலைவர் மகேஷ் என்பவர் தனக்கு மாமூல் தராவிட்டால் இங்கு குடியிருக்க முடியாது எனக்கூறி தொடர்ந்து மிரட்டி பணம் பறித்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதேபோல் கோயில் இடத்தில் வாடகைக்கு குடியிருந்து வரும் சங்கர் (63) என்ற முதியவர் தரைத்தளத்தில் டிரில்லிங், கட்டிங் உள்ளிட்ட இயந்திரங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவரிடம் நீங்கள் கோயில் இடத்தில் வீடு கட்டியுள்ளதாக மிரட்டி இரண்டு தவணையாக மகேஷ், 15 ஆயிரம் ரூபாய் மாமூல் பெற்றுச் சென்றுள்ளார். பின்னர் மேலும் 20 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்துபோன சங்கர், இதுகுறித்து ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்ட போது மகேஷ், முதியவர் சங்கரை மிரட்டி பணம் பறித்ததும், இதேபோல் பலரிடம் மிரட்டி மாமூல் வசூலித்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து இந்து மக்கள் கட்சி சென்னை மாவட்ட துணைத்தலைவர் மகேஷ் மீது மிரட்டல், மிரட்டி பணம் பறித்தல், உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT