அரசியல்

ஓபிஎஸ் ஆதரவாளர் குண்டுக் கட்டாக வெளியேற்றம்: தேர்தல் ஆணைய கூட்டத்தில் பரபரப்பு

காமதேனு

அனைத்து கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர் காவல்துறையினரால் குண்டுக் கட்டாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணிகள் நாடு முழுக்க நடக்க உள்ளது. இதற்காக மாநில வாரியாக மாநில தேர்தல் ஆணையம் தலைமையில் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் மாநில தேர்தல் ஆணையம் சார்பாக இன்று கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக உள்பட அனைத்துக்கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

அதிகாரப்போட்டி நடந்து வரும் அதிமுகவில் தங்களது கட்சி சார்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொள்வார்கள் என்று எடப்பாடி பழனிசாமி சார்பில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டது. இக்கூட்டத்தில் கோவை செல்வராஜ் கலந்து கொள்வார் என்று ஓ.பன்னீர்செல்வம் சார்பாக கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

இக்கூட்டம் இன்று துவங்குவதற்கு முன்பாகவே, கோவை செல்வராஜ் முதல் ஆளாக இருக்கைக்கு வந்து விட்டார். இதன் பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வந்தனர். அப்போது கோவை செல்வராஜ் முன்பு இருந்த அதிமுக போர்டை ஜெயக்குமார் தன் முன் எடுத்து வைத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் அருகே கோவை செல்வராஜ் அமர்ந்திருந்தார். ஆனால், மூவரும் பேசிக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் தரப்பில் தென் சென்னை மாவட்ட செயலாளரான சதீஷ்குமார் கலந்து கொள்வதற்காக முயற்சி செய்தார். ஆனால், இரண்டு முறை அவரை காவலர்கள் தடுத்து நிறுத்தினர். உங்கள் தரப்பில் இருந்து தரப்பட்ட கடிதத்தில் கோவை செல்வராஜ் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று போலீஸார் கூறினார். இதனை மீறி மூன்றாவது முறையாக சதீஷ்குமார் கூட்ட அரங்கிற்குள் செல்ல முயன்றார். அவரை போலீஸார் குண்டுக் கட்டாகத் தூக்கி வெளியேற்றினர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

SCROLL FOR NEXT