அரசியல்

பழைய பதவியை நீக்கிவிட்டார்; புதிய பதவியை வைத்துவிட்டார்: ட்விட்டரில் ஈபிஎஸ் ட்விஸ்ட்!

காமதேனு

இணை ஒருங்கிணைப்பாளர் பதவியைத் துறந்து, தலைமை கழக செயலாளராகத் தொடர்வதாக எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

ஒற்றைத் தலைமை பிரச்சினை காரணமாக அதிமுகவில் தொடர்ந்து கருத்து மோதல்கள் வெடித்து வருகின்றன. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டன என ஈபிஎஸ் தரப்பினர் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினரின் முரண்பாடான பேட்டிகள், போஸ்டர் யுத்தம், பேனர் யுத்தம் எனக் கட்சிக்குள் களேபரங்கள் தொடர்கின்றன. இந்நிலையில், உள்ளாட்சி அமைப்பு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட ஏதுவாக ஏ, பி படிவங்களை தனக்கு அனுப்பி வைக்குமாறு ஓ. பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பினார்.

இதைத் தொடர்ந்து ஓபிஎஸ்க்கு எடப்பாடி பழனிசாமி பதில் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், “ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தில் கழக செயற்குழுவால் கொண்டு வரப்பட்ட கழக சட்ட திட்டத் திருத்தங்கள் அங்கீகரிக்கப்பட வில்லை. ஆதலால், அந்த சட்ட திட்டத் திருத்தங்கள் காலாவதியாகிவிட்டன. எனவே ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் அனுப்பியுள்ள கடிதம் செல்லத்தக்கது அல்ல” எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டிருந்ததை நீக்கி விட்டு, தலைமை கழக செயலாளர் எனத் தனது கட்சிப் பதவியை மாற்றிவிட்டார். பொதுக்குழு செல்லாது என கூறி ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராகவே தொடர்ந்து வருகிறார். தனது ட்விட்டர் பக்கத்திலும் தன்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்றே குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT