அரசியல்

அதிமுக பொதுக்குழுவில் கலவரத்தை ஏற்படுத்த ஈபிஎஸ் ஆதரவாளர்கள் திட்டம்: டிஜிபியிடம் புகழேந்தி புகார்

காமதேனு

அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் போது ஈ.பி.எஸ் ஆதரவாளர்கள் ரவுடிகளை ஏவி கலவரம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் பொதுக்குழு கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்க கூடாது என்றும் டிஜிபியிடம் புகார் மனு அளித்துள்ளதாக அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி கூறினார்.

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், வரும் 23-ம் தேதி அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் வானகரத்திலுள்ள தனியார் மண்டபத்தில் திட்டமிட்டபடி நடைபெறும் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ஓ.பி.எஸ் ஆதரவாளரும், முன்னாள் அ.தி.மு.க நிர்வாகியுமான புகழேந்தி பொதுக்குழு கூட்டத்தின் போது பாதுகாப்பு வழங்கக்கோரி டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, தமிழகம் முழுவதும் பொதுக்குழு கூட்டத்தின் போது அராஜகம் செய்வதற்காக ஈ.பி.எஸ் ஆதரவாளர்கள் ரவுடிகளை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் பொதுக்குழு கூட்டத்தின் போது சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதன் காரணமாகவே ஓ.பி.எஸ் பொதுக்குழுவை தள்ளிவைக்கக் கோரியுள்ளார். ஆனால் அதை மீறி பொதுக்குழு கூட்டம் நடத்த ஈ.பி.எஸ் தரப்பு திட்டமிட்டுள்ளது. கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த போலீஸார் அனுமதி வழங்கக்கூடாது. மீறி அனுமதி வழங்கினாலும் கூட்டத்துக்கு வருபவர்களின் பாதுகாப்பை காவல்துறை உறுதிப்படுத்த வேண்டும்.

அதுமட்டுமன்றி அ.தி.மு.க கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் எடுக்கும் முடிவுதான் இறுதியான முடிவு. தொண்டர்கள் ரத்தம் சிந்துவதை ஓ.பி.எஸ் விரும்பவில்லை. சுமுகமாக சென்றுவிடலாம் என கூறிய பிறகும் ஈ.பி.எஸ் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. மேலும் அ.தி.மு.கவில் தான் பதவிக்காக வரவில்லை. ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக மட்டுமே வந்திருக்கிறேன்" என்றார்.

SCROLL FOR NEXT