அரசியல்

எங்கள் கோரிக்கை என்ன ஆச்சு?; முறையிட்ட ஈபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள்: சபாநாயகர் அளித்த முக்கிய பதில் என்ன?

காமதேனு

எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகரைச் சந்திக்க எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் சட்டமன்றத்திற்கு வந்துள்ளனர்.

சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே ‘அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டுவிட்டார். அதனால் அவர் வகித்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை , ஆர்.பி. உதயகுமாருக்கு கொடுக்க வேண்டும்’ என எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகர் அப்பாவுக்குக் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. இது குறித்து சபாநாயகர் எந்த முடிவும் எடுக்காததால் நேற்று ஓபிஎஸ் எதிர்க்கட்சி துணைத்தலைவராக சட்டமன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சட்டமன்றத்தைப் புறக்கணிப்பு செய்தனர்.

இன்று மீண்டும் சட்டமன்றம் கூட உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு எம்எல்ஏக்கள் சபாநாயகரை சந்திக்கச் சட்டமன்ற வளாகத்திற்கு வந்தனர். அதிமுக எம்எல்ஏக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அறையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் முடிந்த பிறகு சபாநாயகரைச் சந்தித்தனர். அப்போது, எதிர்க்கட்சி துணைத் தலைவர் யார் என்பதை பேரவையில் அறிவிப்பதாக பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்களிடம் சபாநாயகர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT