அரசியல்

ஈபிஎஸ்- ஓபிஎஸ் தரப்பு காரசாரம்: உயர் நீதிமன்றத்தில் அனல் பறக்கும் வாதம்

காமதேனு

அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக ஈபிஎஸ்- ஓபிஎஸ் தரப்புக்கு இடையே சென்னை உயர் நீதிமன்றத்தில் காரசார வாதம் நடைபெற்று வருகிறது.

சென்னையில் கடந்த ஜூலை 11-ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்ததோடு, ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவரது ஆதரவாளர்கள் சிலரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், "ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்றும் 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் அதிரடியாக தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ஈபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் விஜய் நாராயணன், சி.எஸ்.வைத்தியநாதன், அரிமா சுந்தரம், நர்பதா சம்பல் ஆகியோர் ஆஜரானார்கள். ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், அரவிந்த் பாண்டியன் ஆகியோர் ஆஜரானார்கள்.

"ஒன்றரை கோடி தொண்டர்களுக்காக அல்லாமல், ஓபிஎஸ் நலனுக்காக தனிநீதிபதி தீர்ப்பளித்துள்ளார். தனி நீதிபதியின் தீர்ப்பு யூகத்தின் அடிப்படையிலானது. பொதுக்குழுவின் முடிவை ஏற்பவர்களே அடிப்படை உறுப்பினர்கள். கூட்டம் நடத்த கூடாது என ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்த நிலையில், இருவரும் இணைந்து கூட்ட வேண்டும் என உத்தரவிட்டது விபரீதமானது. இருவரும் இணைந்து செயல்பட தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆனால் ஓபிஎஸ் உடன் சேர்ந்து இனி செயல்பட முடியாது. அதிமுகவின் கட்சி நடவடிக்கைகள் இதனால் முடங்கிவிடும். தனி நீதிபதியின் உத்தரவு கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது" என்று ஈபிஎஸ் தரப்பு வாதிட்டது.

இதையடுத்து ஓபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. "அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் ஒரே கட்சி அதிமுக தான். அடிப்படை உறுப்பினர்களை விட பொதுக்குழு உறுப்பினர்களே மேலானவர்கள் என்பதை ஏற்க முடியாது" என்று வாதம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். தொடர்ந்து இரு தரப்புக்கு மத்தியில் காரசார வாதம் நடைபெற இருக்கிறது.

SCROLL FOR NEXT