அரசியல்

`சபாநாயகர் அரசியல் ரீதியாகச் செயல்படுகிறார்’- அப்பாவு மீது ஈபிஎஸ் குற்றச்சாட்டு!

காமதேனு

“திமுக தலைவரின் ஆலோசனைப்படிதான் சட்டப்பேரவைத் தலைவர் செயல்படுகிறார் என நாங்கள் கருதுகிறோம். அரசியல் ரீதியாக அதிமுகவை எதிர்கொள்ள முடியாமல், திமுக தலைவர் கொள்ளைப் புறத்தின் வழியாக பேரவைத் தலைவர் மூலமாக எங்களைப் பழிவாங்க நினைக்கிறார்.” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற கூட்டத்திலிருந்து வெளியேறிய எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,“உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராகவும், எதிர்க்கட்சி துணைத் தலைவராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்களை நியமனம் செய்ய வேண்டும் எனவும் சபாநாயகருக்குக் கடிதம் கொடுக்கப்பட்டு சுமார் இரண்டு மாதம் ஆகிறது. பிறகு இரண்டு முறை நினைவூட்டுக்கடிதம் வழங்கப்பட்டது. நேற்று வரை சபாநாயகர் சரியான முடிவு எடுக்கவில்லை. நாங்கள் கொடுத்திருந்த கோரிக்கையை ஏற்காமல் ஏற்கெனவே துணைத் தலைவராக இருந்தவரையே தொடர வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டு, அந்த இருக்கையில் அமர வைத்து இருக்கிறார்கள்.

நியாயமாகச் செயல்பட வேண்டிய சபாநாயகர், தற்போது அரசியல் ரீதியாகச் செயல்படுவதாக நாங்கள் பார்க்கிறோம். சட்டமன்றம் என்பது வேறு. கட்சி என்பது வேறு. சட்டமன்றத்திலே அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அவர் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். அதேபோல சட்டமன்ற எதிர்க்கட்சியில் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி தலைவர், துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள்தான் அந்தப் பதவியில் அமர்த்தப்படுவார்கள் என்பது மரபு.

 பேரவையின் கேள்வி நேரம் முடிந்த நிலையில் நீங்கள் வெளியில் செல்லலாம் எனச் சொல்கிறார். அப்படியென்றால், திமுக தலைவரின் ஆலோசனைப்படிதான் சட்டப்பேரவைத் தலைவர் செயல்படுகிறார் என நாங்கள் கருதுகிறோம். அரசியல் ரீதியாக அதிமுகவை எதிர்கொள்ள முடியாமல், திமுக தலைவர் கொள்ளைப் புறத்தின் வழியாக பேரவைத் தலைவர் மூலமாக எங்களைப் பழிவாங்க நினைக்கிறார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, ஜெயலலிதா மரணம் ஆகியவற்றிற்கு நாங்கள்தான் ஆணையம் அமைத்தோம் அதற்கு நாங்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.” என்றார்.

SCROLL FOR NEXT