நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி பேசினார்.
நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி பேசினார்.  
அரசியல்

மின் கட்டணம், பேருந்து கட்டணம் உயரப் போகிறதாம்!

காமதேனு

"மத்திய அரசை காரணம் காட்டி மின்சார கட்டணம், பேருந்து கட்டணம் உயரவும் வாய்ப்புள்ளது" என அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார்.

தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டதைக் கண்டித்து நாமக்கல் பூங்கா சாலையில் மாவட்ட அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி பேசுகையில், "தமிழக அரசு, அடித்தட்டு மக்களும் பாதிக்கும் வகையில் பல மடங்கு சொத்து வரியை உயர்த்தி உள்ளது. அதிமுக ஆட்சியில் இருக்கும்போது மக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக, வரியை உயர்த்தாமல் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தினோம்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுகவினர்

கடந்த 10 மாத காலத்தில் திமுக அரசு எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. சொத்து வரியை பல மடங்கு உயர்த்தியதே இந்த ஆட்சியின் சாதனை. மத்திய அரசினை குறை சொல்லி தற்போது சொத்து வரியை உயர்த்தியுள்ளனர். இனி வரும் காலங்களில் மத்திய அரசை காரணம் காட்டி மின்சார கட்டண்ம், பஸ் கட்டணம் உயரவும் வாய்ப்புள்ளது.

பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை மீதான, மாநில வரி குறைக்கப்பட்டு தமிழகத்தைவிட பெட்ரோல், டீசல் ஒரு லிட்டருக்க ரூ.10 குறைவாக உள்ளது. குறிப்பாக ஜார்கண்ட் மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை ரூ.25 குறைவாக உள்ளது. இதனால் தமிழக வாகன உரிமையாளர்கள் அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கர்நாடகா பகுதிகளுக்குச் சென்று பெட்ரோல், டீசல் பிடித்து வருகின்றனர். இதனால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

மத்திய அரசைப் பின்பற்றி திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி பெட்ரோல், டீசல் விலையை குறைத்திருக்க வேண்டும். மாநில அரசு வரியை குறைக்க வேண்டிய நிலையில் மத்திய அரசை குறை கூறுகின்றனர். அனைத்து பொதுமக்களும் பாதிக்கப்படுவதால் சொத்து வரி, பெட்ரோல், டீசல் வரியை உடனடியாக குறைக்க வேண்டும். சட்டப்பேரவை கூட்டத்தில் இப்பிரச்சினையை அதிமுக எழுப்பும். வரி குறைக்கப்படும் வரை பொதுமக்களுக்காக அதிமுக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும்" என்றார்.

SCROLL FOR NEXT