அரசியல்

பாஜகவின் பிரதான கூட்டாளியா ஃபேஸ்புக்?

எஸ்.எஸ்.லெனின்

தேர்தல் முடிவுகளை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தங்களது செயல்பாடுகளை கூராய்வதும், வெற்றி - தோல்விக்கான காரணங்களை கண்டறிய முயல்வதும் வழக்கம். அண்மையில் அப்படி காங்கிரஸ் தலைமை முன்வைத்த பகீர் புகார் ஒன்று அரசியலுக்கு அப்பாலும் தேசத்தை உலுக்கியது. வெற்றிமுகத்திலிருக்கும் பாஜகவுக்கு எதிரான குற்றச்சாட்டாக மட்டுமன்றி, தேசத்தின் ஜனநாயகத்துக்கு ஊறுவிளைவிப்பவை குறித்தும் அவை எச்சரிக்கின்றன. ’ஃபேஸ்புக் என்ற செல்வாக்கான சமூக ஊடகம், ஆளும் கட்சியான பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், இதற்கு நாட்டின் மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனமான ரிலையன்ஸ் குழுமம் பகிரங்க உதவிகள் செய்ததாகவும், இவையனைத்தையும் இந்திய தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாது இருந்ததாகவும்..’ நீளும் இந்த குற்றச்சாட்டுகளை எளிதில் புறக்கணித்துவிட முடியாது.

சுதந்திர ஊடகர்கள் வீசிய குண்டு

’தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்’ என்ற சுதந்திர ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பு, ’ஆட் வாட்ச்’ என்ற விளம்பர ஆய்வு அமைப்போடு சேர்ந்து, தேர்தல் கால இந்தியாவில் சமூக ஊடக விளம்பரங்களின் பின்னணி குறித்து ஆராய்ந்தது. 2019, பிப்ரவரியில் தொடங்கி சுமார் 22 மாதங்களில் ஃபேஸ்புக்கில் வெளியான செய்தி வடிவிலான பல லட்சம் அரசியல் விளம்பரங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 2019 மக்களவை தேர்தல் மற்றும் 9 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்ற காலத்தை மையமாகக்கொண்ட இந்த ஆய்வு முடிவுகளில், பல விநோதமான உண்மைகள் வெளிப்பட்டிருக்கின்றன.

’தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்’ அங்கத்தினர் குமார் சம்பவ், ’ஆட் வாட்ச்’ அமைப்பின் ஆய்வாளர் நயன்தாரா ரங்கநாதன் உள்ளிட்டோர் தொகுத்த தரவுகளை, கத்தாரை சேர்ந்த பிரபல ஊடக நிறுவனமான அல்ஜசீரா கட்டுரைகளாக வெளியிட்டது. ஃபேஸ்புக் என்ற சமூக ஊடக நிறுவனத்தின் முகமூடியை கிழித்ததோடு, இந்திய தேர்தல் ஆணையத்தையும் இந்த கட்டுரைகள் நெருக்கடிக்கு ஆளாக்கின.

அமெரிக்காவில் ஆரம்பித்த அநாமதேயம்

சமூக ஊடகங்களில் குறிப்பிட்ட கட்சி சார்பிலான அநாமதேயர்களின் விளம்பரங்களுக்கு அக்கட்சியை பொறுப்பாளியாக்குகிறது இந்திய தேர்தல் ஆணையம். மேலும், இவ்வாறு அநாமதேய விளம்பரங்கள் வெளியிடுவது இந்திய சட்டப்படி தவறானதும்கூட. ட்ரம்ப் அதிபரான அமெரிக்கத் தேர்தலிலும்கூட, ஃபேஸ்புக்கில் அநாமதேயர்கள் வெளியிட்ட விளம்பரங்களால் வாக்காளர்களை குழப்பி மடைமாற்றியது நடந்திருக்கிறது.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரும் தற்போதைய விசிலூதியுமான பிரான்சிஸ் ஹாகன் உள்ளிட்டோர், இவை குறித்து ஆவணபூர்வமாக தொடர்ந்து குரல்கொடுத்து வருகின்றனர். அமெரிக்காவில் இந்த விளம்பர சர்ச்சைகள் ஃபேஸ்புக் நிறுவனத்தை பெரும் இக்கட்டில் தள்ளியதில், அநாமதேயர்களின் ஆதரவு விளம்பரங்களை தவிர்ப்பதற்கான விதிமுறைகளை ஃபேஸ்புக் இறுக்கியது. ஆனால், இந்தியாவில் அவற்றை வசதியாக கட்டவிழ்த்திருப்பது தற்போது வெளிப்பட்டிருக்கிறது.

வழிகாட்டிய காங்கிரஸ்

ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் சாமானியர் வாழ்க்கையில் தவிர்க்க இயலாத அங்கமாகி உள்ளன. விளம்பரதாரர்களின் வணிகப்பொருட்கள் குறித்த தாக்கத்தை இந்த சாமானியர்களிடம் திணிப்பதில் ஃபேஸ்புக்கின் வித்தகம் அலாதியானது. இதற்காக பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரித்து விளம்பர நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ளவும் செய்கிறது. இந்த வணிகப் பொருட்களின் வரிசையில் அண்மையில் வாக்கு என்பதும் சேர்ந்திருக்கிறது. தேர்தல்களில் வெற்றிவாய்ப்பை தீர்மானிக்கும் ’மதில்மேல் பூனை’ வாக்காளர்களை தங்கள் வசப்படுத்த திணறும் அரசியல் கட்சிகளுக்கு இந்த வகையில் ஃபேஸ்புக் பேருதவியாகிறது.

4 வருடங்களுக்கு முன்னர் ஃபேஸ்புக் நிறுவனத்தின் உதவியுடன் பயனர்களின் தரவுகளை களவாடிய கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்ற நிறுவனம், அமெரிக்கத் தேர்தலின் போக்கை தீர்மானிக்க முயன்றது சர்ச்சையானது. இந்த நிறுவனத்தின் சர்வதேச வாடிக்கையாளர் பட்டியலில் இருந்ததாக, இந்தியாவின் காங்கிரஸ் கட்சியும் குற்றச்சாட்டுக்கு ஆளானது. சுதாரித்துக்கொண்ட பாஜக, ஃபேஸ்புக்கின் தேர்தல் உபாயங்களை இன்னும் விரிவாக்கி தற்போதைய நிலையை எட்டியுள்ளது. இந்த வகையில் பாஜகவுக்கு அடியெடுத்து தந்துவிட்டு தற்போது புலம்பிக்கொண்டிருக்கிறது காங்கிரஸ்.

முகநூலில் முகமூடியாளர்கள்

முகநூலில் அநாமதேய அரசியல் லாவணிகளை ஆரம்பிப்போர் பலவிதங்களில் அவற்றை தொடுக்கின்றனர். முதலில் கவர்ச்சிகரமான, வைரல் வீடியோக்களை வெளியிட்டு தங்கள் பக்கங்களுக்கான பார்வையாளர்களை லட்சக்கணக்கில் தேற்றுகின்றனர். பின்னர் மறைமுகமாக தாங்கள் எதிர்பார்க்கும் கருத்துக்களை மக்களிடையே விதைக்கும் பதிவுகளை பகிர ஆரம்பிக்கின்றனர். ஆதரவு வீடியோக்களைவிட எதிர்க்கட்சிகளை சதாய்க்கும் குயுக்தியான வீடியோக்கள் அதிகம் வெளியாகின்றன. அரசியல் தலைவர்களின் முழுநீள அரசியல் உரைகளில் ஆங்காங்கே வெட்டி ஒட்டி, அவர்களுக்கு எதிராக சர்ச்சையைக் கிளப்பும் குறு வீடியோக்கள் வெளியிடுவதும் அவற்றில் அடங்கும்.

பயங்கரவாதிகளை மென்மையாக கையாண்டதாக பாஜகவை குற்றம்சாட்டிய ராகுல்காந்தி, “பாகிஸ்தான் தீவிரவாதி மசூத் அசாரை, ’அசார் ஜி’ என மரியாதையாக அழைப்பார்கள் போலிருக்கு....” என்று தன்னுடைய உரை ஒன்றில் கிண்டல் செய்திருந்தார். இதில் கணக்காக கத்தரி போட்டு, பாகிஸ்தான் பயங்கரவாதியை ராகுல் மரியாதையாக விளிப்பதாக 2 நிமிட வைரல் வீடியோ தயாரித்தார்கள். காங்கிரஸ் தகவல்தொழில்நுட்ப அணியினர் சுதாரித்து, உண்மையை விளம்பும் பதிலடி வீடியோவை தயாரித்து வெளியிடுவதற்குள், முந்தைய சர்ச்சை வீடியோ இதர சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டு பல லட்சம் பார்வைகளை கடந்திருந்தது.

முகநூல் முதல் தேர்தல் ஆணையம் வரை

அரசியல் சார்பு புரளிகள், ஒருதலைபட்சமான பகிர்வுகள், பொய்யான செய்திகள் பரப்பப்படுவது ஆகியவற்றை கண்டறியவும், கட்டுப்படுத்தவும் ஃபேஸ்புக் பிரத்யேக மென்பொருள் கட்டமைப்பினை நிறுவியுள்ளது. ஆனால், இந்தக் கட்டமைப்பினை பயன்படுத்தி எவருடைய பகிர்வுகளை தடைசெய்ய வேண்டும், எவற்றைக் கண்டுகொள்ளாது அனுமதிக்க வேண்டும் என்பதில் ஃபேஸ்புக் முன்தீர்மானத்துடன் இயங்குவதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளது. அல்ஜசீராவின் கட்டுரைப்படி, வர்த்தக நோக்கிலான தேர்தல் விளம்பரங்களை வெளியிடுவதிலும் ஃபேஸ்புக் பாரபட்சம் காட்டியிருக்கிறது. பாஜக விளம்பரங்களுக்கு சகாய கட்டணமும், காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகளுக்கு அதிக கட்டணமும் விதித்ததை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி உள்ளனர்.

பாரபட்சமற்ற, நடுநிலையான தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் ஆணையத்துக்கு எதிராகவும் குற்றச்சாட்டின் விரல்கள் நீள்கின்றன. மரபான அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் போலவே சமூக ஊடகங்களில் வெளியாகும் கட்சி சார்பு விளம்பரங்களைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பும் தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறது. தேர்தல் ஆணையம் நெருக்கடி தந்தால் ஃபேஸ்புக் நிறுவனம் தனது வசமிருக்கும் கட்சி ஆதரவு பதிவுகள், பகிர்வுகள், விளம்பரங்கள், போலிக் கணக்குகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் சமர்ப்பித்திருக்கும். அதேபோல அந்த விளம்பரங்களுடனான தங்களது தொடர்பு குறித்தும் சம்பந்தபட்ட கட்சி விளக்கம் அளித்திருக்கும். ஆனால், தேர்தல் ஆணையம் வாளாவிருந்ததாகவும் ஊடகர்களின் குற்றச்சாட்டுகள் வலுத்துள்ளன.

நியூஜே நிறுவனர் ஷலப் உபத்யாய்

ஃபேஸ்புக் - ரிலையன்ஸ் வலை

ஃபேஸ்புக், தேர்தல் ஆணையம் ஆகியவை மட்டுமன்றி இந்தியாவின் பெரும் கார்ப்பரேட் நிறுவனமான ரிலையன்ஸுக்கு எதிராகவும் அல்ஜசீரா கட்டுரையின் குற்றச்சாட்டு நீள்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் தமது ஆதாயத்துக்காக ஆளும் கட்சியினருக்கு ஆதரவான நிலைப்பாடு எடுப்பது பரவலாக காணக்கிடைப்பதுதான். அம்பானி, அதானி போன்ற நிறுவனங்கள் பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் வெளிப்படையாக இருப்பதும், இந்த நிறுவனங்களுக்கு சகாயமளிக்கும் தயாளத்தோடு பாஜக நடந்துகொள்வதும் ஊரறிந்த ரகசியங்களில் சேர்பவை.

பாஜக ஆதரவு மற்றும் எதிர்க்கட்சி அவதூறுக்கான விளம்பர வீடியோக்களை உருவாக்கி பரப்பியவற்றில் பிரதானமானது நியூஜே (NEWJ) என்ற ஊடக நிறுவனம். இதன் நிறுவனர் ஷலப் உபாத்யாய். இவரது தந்தையான உமேஷ் உபாத்யாய் ரிலையன்ஸ் குழுமத்தின் ஊடக இயக்குநராக பணியாற்றுபவர். ஷலப்பின் குடும்ப உறவினரான சதீஷ் உபத்யாய் பாஜகவின் டெல்லி நிர்வாகிகளில் ஒருவர். இந்த நியூஜே நிறுவனத்தின் பெருமளவு பங்குகளை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதும், கடனாக பெரும்தொகையை வழங்கியுள்ளதும், இந்த நிதியாதாரமே ஃபேஸ்புக் விளம்பரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மூளையை மழுங்கடிக்கும் பிரச்சாரம்

மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றச்சாட்டுக்கு ஆளான பாஜக பெண் சாமியாரான பிரக்யா தாக்கூர், 2019 மக்களவை தேர்தலில் வெற்றிபெறுவதற்கு தோதாக நியூஜே வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலானது. பிரக்யா மீதான வழக்கு சதி நடவடிக்கை என்றும், நீதிமன்றமே இவரை விடுவித்துவிட்டதாகவும் செய்தி பாணியிலான விளம்பரத்தை வெளியிட்டது நியூஜே. பங்களாதேஷ் தேசத்தின் உள்ளூர் கலவரத்தில் சிறுபான்மை இந்துக்கள் மீதான தாக்குதல் வீடியோவை, இந்தியாவில் நிகழ்ந்ததாக சித்தரித்து வெளியிட்டார்கள். இன்னொரு சித்தரிப்பில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியை பாகிஸ்தான் ஆதரவாளராகப் பரப்பினார்கள்.

பெரும்பான்மையினருக்கு அச்சுறுத்தல், தேசப் பாதுகாப்பு, இஸ்லாமியர் வெறுப்பு என பலவகையில் தயாரான பரபரப்பு வீடியோக்களை, குறிப்பிட்ட பயனர்களின் கண்களில் படுமாறு உலாவரச் செய்யும் பணியை ஃபேஸ்புக் செவ்வனே செய்தது. நமது விருப்பு வெறுப்புகள் குறித்து தெளிவான தரவுகளைச் சேகரித்து வைத்திருக்கும் ஃபேஸ்புக்குக்கு இது எளிதான வேலையும்கூட. வெற்றி வாய்ப்பு இழுபறியாகும் தொகுதிகளின் வாக்காளர்கள் இந்த வகையில் குறிவைத்து இரையானார்கள்.

நாட்டில் பெரும் தாக்கத்தையும் மக்கள் மத்தியில் விவாதத்தையும் ஏற்படுத்தி இருக்க வேண்டிய இந்த சமூக ஊடக உள்ளடி குறித்த பரபரப்பு, அது வெளியான வேகத்தில் இன்னொரு பரபரப்பினால் அடங்கிப்போனது. ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் வெளியான ஒரு வாரம் கழித்து, பிரதமர் மோடி அதனை சிலாகித்ததும் ஊடகம் மற்றும் பொதுஜனத்தின் கவனம் மடை மாறியது.

சமூக ஊடகங்களின் சதிராட்டம்

சமூக ஊடகங்களுக்கு வருவாயே பிரதானம். கருத்துச் சுதந்திரம், தனியுரிமை என்றெல்லாம் அவை முழங்கினாலும், வர்த்தகம் என்று வந்ததும் சமர்த்தாக ஆளும் அதிகாரத்திடம் சாய்ந்து விடுவது வழக்கம். ஃபேஸ்புக் வகையில் இந்த ரீதியிலான குற்றச்சாட்டுகள் பல தேசங்களில் தொடர்கதையாகி வருகின்றன. அப்பாவி பயனர்களின் மூளைக்குள் புகுந்து விரும்பியபடி முடிவெடுக்க உந்தும் ஃபேஸ்புக் பாணி மோசமான முன்னுதாரணமாகி வருகிறது.

5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்கு முந்தைய ஆய்வு முடிவுகள் இவை என்பதால், இந்த தேர்தல் பின்னணி குறித்த அப்டேட் எதுவும் அல்ஜசீரா கட்டுரையில் இடம்பெறவில்லை. ஆனால் ’பாஜக - ஃபேஸ்புக் - ரிலையன்ஸ் - தேர்தல் ஆணையம்’ கண்ணிகளை ஒன்றிணைக்கும், வெற்றிகரமான தேர்தல் உத்தி இந்த தேர்தலிலும் தொடர்ந்திருக்கவே வாய்ப்புள்ளது. அடுத்து வரும் 2024 மக்களவை தேர்தலிலும் இவை தொடராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஊடகர்களின் குற்றச்சாட்டுக்கு எதிராக நியூஜே தரப்பில் மட்டும் ஒரு மறுப்பு வெளியானது. தேர்தல் ஆணையம், ஃபேஸ்புக், பாஜக தரப்பிலிருந்தும் என்ன விளக்கம் தரப்போகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள தேசம் ஆர்வமாக உள்ளது.

SCROLL FOR NEXT