அரசியல்

ஆர்ப்பாட்டத்தில் மயங்கிய எடப்பாடி பழனிசாமிக்கு மருத்துவமனையில் பரிசோதனை!

காமதேனு

சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது மயங்கிய எடப்பாடி பழனிசாமிக்கு தனியார் மருத்துவமனையில் இன்று பரிசோதனை செய்யப்பட்டது.

ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணி என்று அதிமுக இரண்டாக உடைந்துவிட்டது. இருவரும் மாறி மாறி கட்சி நிர்வாகிகளை நீக்கி வருகின்றனர். அண்மையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஓபிஎஸ்சிடம் ஈபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் யாரும் நலம் விசாரிக்கவில்லை. இதனிடையே, 4 நாள் பயணமாக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி 2 நாள் பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.

இதனிடையே, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து கடந்த 27-ம் தேதி சென்னையில் ஈபிஎஸ் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, நின்று கொண்டே 90 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசினார். திடீரென பேசிக் கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமிக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக மைக்கை அருகில் இருந்தவரிடம் கொடுத்து விட்டு சில நொடிகள் நின்று கொண்டிருந்தார். மயக்கம் அதிகரிக்கவே அங்கேயே அமர வைக்கப்பட்டார். அவரது முகத்தில் தண்ணீர் அடிக்கப்பட்டது. சிறிது நேரம் ஓய்வுக்கு பிறகு காரில் வீட்டிற்கு சென்றார்.

இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. சில நாட்கள் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஆர்ப்பாட்டத்தின் போது மயங்கிய நிலையில், எடப்பாடி பழனிசாமி பரிசோதனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT