அரசியல்

‘அடுத்த தேர்தல் எப்போது வந்தாலும் நாங்கள் வெற்றிபெறுவோம்’ - அதிமுக அலுவலகம் வந்த ஈபிஎஸ் உறுதி!

காமதேனு

இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதன் முறையாக இன்று அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த முன்னாள் முதல்வர் ஈபிஎஸ்சை ஆரவாரத்தோடு வரவேற்றனர் அதிமுக தொண்டர்கள்.

ஒற்றைத் தலைமை விவகாரம் எழுந்த பிறகு நடந்த முட்டல், மோதல்கள், அதனை ஒட்டி நடந்த அதிமுக பொதுக்குழு, அதற்குப்பிறகான நீதிமன்ற வழக்குகள் என இப்படி அடுக்கடுக்காக பிரச்சனைகள் இருந்த நிலையில் தான் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டாலும் தலைமை அலுவலகத்திற்கு ஈபிஎஸ் வரவில்லை.

அதிமுக பொதுக்குழு செல்லும், அதிமுக தலைமை கழக சாவியை ஈபிஎஸ் தரப்பில் ஒப்படைக்க வேண்டும் என்று அவருக்கு சாதகமான தீர்ப்புகள் வந்த நிலையில் தெளிவான அரசியல் சூழலில் சுமார் 72 நாட்களுக்குப் பிறகு இன்று அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஈபிஎஸ் வந்திருக்கிறார்.

அவரது வருகையை ஒட்டி அதிமுக தலைமை அலுவலகம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேளதாளங்கள் முழங்க முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். ஆயிரக்கணக்கான தொண்டர்களும் தலைமை அலுவலகத்தில் திரண்டிருந்தனர்.

அலுவலக வாயிலில் உள்ள முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து வணங்கி அலுவலகத்தில் உள்ளே சென்ற ஈ பி எஸ்க்கு, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். புதிய நிர்வாகிகளுக்கு அவரும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

அதன் பிறகு அங்கிருந்து தொண்டர்களிடம் அவர் உரையாற்றினார். அதிமுக மீது வழக்கு போடுவதே திமுக வழக்கமாக வைத்திருக்கிறது. 60 ஆண்டுகால வரலாற்றில் சோதனைகளையே சாதனைகளாக மாற்றியது அதிமுக.

இந்த இயக்கத்தை பிளவுபடுத்த நினைத்தவர்களின் சதிச் செயல் நிறைவேறவில்லை. அடுத்த தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும். தொண்டர்கள் அரவணைப்புடன் மக்களின் ஆதரவுடன் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும். 15 மாத கால ஆட்சியில் எந்த நலத்திட்டத்தையும் ஸ்டாலின் நிறைவேற்ற வில்லை. அதிமுக கொண்டு வந்த திட்டங்களை முடக்குவது தான் திமுக அரசின் வேலையாக இருக்கிறது. இந்த நேரத்தில் சோதனையான நேரத்தில் துணையாக நின்றவர்களுக்கும் ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்" என்று ஈபிஎஸ் பேசினார்.

SCROLL FOR NEXT