அரசியல்

மழையால் முடங்கிய குடியிருப்புகள்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி திடீர் ஆய்வு!

காமதேனு

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகப் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர். ஆனாலும் பல இடங்களில் தண்ணீர் வடியாமல் உள்ளது. தெர்மாகோல், படகுகளுடன் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். சென்னையில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு செய்து வருகிறார்.

முகலிவாக்கம், கொளப்பாக்கம், போரூர், குன்றத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதிக அளவு நீர் தேங்கியுள்ள பகுதிகளில் நேற்று முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மழைநீர் புகுந்துள்ள வீடுகளில் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. முகலிவாக்கம், திருவள்ளூர் நகர், ஆனந்தா நகர் உள்ளிட்ட பகுதிகளை எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "மழைநீர் பெரும்பாலான இடங்களில் வடியவில்லை. பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். சென்னையில் வெள்ள நீர் எங்கும் தேங்கவில்லை என்பது பொய்யான தகவல்" என்று கூறினார்.

SCROLL FOR NEXT