அரசியல்

`ஏழைகள் சிகிச்சை பெறுவதைக் கூட இந்த அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை’: கடலூரில் கொந்தளித்த ஈபிஎஸ்

காமதேனு

“கிராமப்புற ஏழை மக்கள் அந்தப் பகுதியிலேயே சிகிச்சை பெறுவதற்காக அம்மா கிளினிக் என்ற திட்டத்தைக் கொண்டுவந்தோம். ஆனால் ஏழைகள் வைத்தியம் செய்வதைக் கூட இந்த விடியா அரசாங்கத்தால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை காரணமாகக் கடலூர் மாவட்டம் வல்லம் படுகையில் ஒரே நாளில் 9 செ.மீ. மழை பெய்தது. இதன் காரணமாக ஏராளமான விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கி இருக்கின்றன. குடிசை மற்றும் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் ஏராளமான பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். அவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய எடப்பாடி பழனிசாமி, அந்த கிராமத்தில் நடைபெற்ற நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “கடலூர் மாவட்டத்தில் எப்போதெல்லாம் பருவமழை வருகிறதோ அப்போதெல்லாம் இப்பகுதியில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதிமுக ஆட்சிகளின் போது இப்பகுதிக்கு பல்வேறு திட்டங்களைக் கொண்டு வடிகால் வசதி செய்து கொடுத்துள்ளோம். விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில் பயிர்க்கடன் பெற்று அதைத் திரும்பச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்ட போது அதை ஜெயலலிதா தள்ளுபடி செய்தார். ஒரே ஐந்து ஆண்டில் இரண்டு முறை பயிர்க் கடனை தள்ளுபடி செய்த அரசு, நம்முடைய முதல்வர் ஜெயலலிதாவின் அரசுதான்.

அதே போல ஏழை எளிய மக்கள், விவசாயத் தொழிலாளிகள் ஏற்றம் பெறுவதற்காகப் பசு, கன்றுகளைக் கொடுத்தோம். ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு போன்ற திட்டங்களைக் கொண்டுவந்தோம். கிராமம் ஏற்றம் பெறுவதற்காக பல்வேறு திட்டங்களை வழங்கினோம். கிராமப்புற ஏழைமக்கள் அந்தப் பகுதியிலேயே சிகிச்சை பெறுவதற்காக அம்மா கிளினிக் என்ற திட்டத்தைக் கொண்டுவந்தோம். ஆனால் ஏழைகள் வைத்தியம் செய்வதைக் கூட இந்த விடியா அரசாங்கத்தால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தற்போது நகரப்புற மருந்தகம் என நேற்று ஒரு திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்கள். கிராமத்தையெல்லாம் ஒதுக்கிவிட்டு, திட்டத்தின் பெயரை மற்றும் மாற்றிக் கொள்கிறார்கள்” என்றார்.

SCROLL FOR NEXT